வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (11:13 IST)

திவாகரன், தினகரன் மோதல்: அமைதியாக இருந்து ரசிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

திவாகரன், தினகரன் மோதல்: அமைதியாக இருந்து ரசிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்ததை அடுத்து தினகரன் அணி உருவானது. இந்த அணியில் சசிகலாவின் தம்பி திவாகரனும் இருக்கிறார். தற்போது திவாகரனுக்கும் தினகரனுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.


 
 
சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் தினகரன் கட்டுப்பாட்டில் அதிமுக வந்தது. அப்போது தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியது போல தினகரன் குடும்பத்தினரான திவாகரனும் மறைமுகமாக போர்க்கொடி தூக்கினார். சசிகலாவிடம் தினகரனுக்கு எதிராக பல புகார் பட்டியல்களை பலர் மூலமாக வாசித்தார்.
 
தினகரனும், திவாகரனும் மோதிக்கொண்டு இருப்பதை விரும்பாத சசிகலா அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பல முயற்சிகளை எடுத்தார். இறுதியில் சசிகலா குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு துக்க காரியத்தின் போது திவாகரனும், தினகரனும் ஒன்று சேர்ந்தனர்.
 
அதன் பின்னர் இருவரும் இணைந்து செயல்பட ஆரம்பித்தனர். எடப்பாடிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் திவாகரனும் தினகரனுக்கு ஆதரவாகவும், எடப்பாடிக்கு எதிராகவும் ஊடகங்களில் பேசி வந்தார். ஆனால் தற்போது திவாகரன் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதால் தினகரனுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
 
முன்னதாக ஈரோட்டில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசிய திவாகரன் மக்கள் நலனுக்காக திமுகவுடன் கூட்டு வைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. தற்போது வரை எங்கள் அணியில் 40 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுகவில் உள்ள 89 எம்எல்ஏக்களின் உதவியுடன் நாங்கள் இந்த அராஜக ஆட்சியை ஒழிக்க உள்ளோம் என கூறினார்.
 
இந்நிலையில் தற்போது திமுக நடத்த உள்ள நீட் எதிர்ப்பு கூட்டத்துக்கு எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் செல்வார்கள் என கூறினார். இதனை கேட்டு தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் தினகரனிடம் கேள்வி எழுப்பியபோது அப்படியெல்லாம் எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார். இதன் மூலம் தினகரன், திவாகரன் இடையே உள்ள கருத்து வேறுபாடு வெளிப்பட்டுள்ளது. தினகரன், திவாகரன் இடையே தற்போது ஏற்பட்டுள்ள இந்த கருத்து மோதலை எடப்பாடி தரப்பு அமைதியாக இருந்து ரசித்து வருகிறது.