வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 ஜனவரி 2015 (18:42 IST)

சென்னையில் கிறிஸ்தவ மதத்தினர் இந்து மதத்திற்கு மாற்றம்

சென்னை மேற்கு மாம்பாலத்தில் கிறிஸ்தவ மதத்தினர் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர். இதனிடையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
 
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறியவர்கள் 108 பேர் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பும் 'தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து சென்னை மேற்கு மாம்பலம், மேட்லி சாலையில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கட மட கோவிலில், ’தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 
 
இது குறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹிம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்தார். அதில், இந்து மக்கள் கட்சி நடத்தும் 'தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிக்கு' தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை அண்னாநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கட்சியின் மாநில நிர்வாகிகள் புறப்பட தயாரானபோது அவர்களை காவல் துறையினர் கைது செய்து விட்டு காவலில் வைத்தனர். 
 
இதற்கிடையில் சென்னை மேற்கு மாம்பாலத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கட மட கோவிலில், இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் இராம ரவி குமார் நடத்தி வைத்தார்.
 
இந்நிகழ்ச்சியில், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பெண்கள், 5 ஆண்கள் என 10 பேர் மீண்டும் இந்து மதத்துக்கு மாறினர். இவர்களுக்கு இந்துமதச் சடங்குகள் செய்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.