வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 19 நவம்பர் 2014 (08:06 IST)

நெசப்பாக்கத்தில் அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை

சென்னை நெசப்பாக்கத்தில் குடும்பச் சிக்கல் காரணமாக அதிமுக வின் 128 ஆவது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஏ.எம். விஸ்வநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:-
 
சென்னை நெசப்பாக்கம் சூளைப்பள்ளம் பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் 33 வயதுடைய ஏ.எம். விஸ்வநாதன் என்ற புல்லட் விஸ்வநாதன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதிமுக கட்சியின் 128 ஆவது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலராகவும் இருந்து வந்தார்.
 
விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் நெசப்பாக்கம் மாரியம்மன் கோயில் தீ மேடை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் விஸ்வநாதனை மறித்துத் தகராறு செய்தது.
 
தகராறு முற்றவே அந்தக் கும்பல் விஸ்வநாதனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், அலறியடித்து ஓடினர்.
 
இதற்கிடையே பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விஸ்வநாதனை சிலர் மீட்டு, வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
 
பின்னர் அவர், அங்கிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் விஸ்வநாதன் இறந்தார். இதையடுத்து அவரது சடலம், பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
 
இது குறித்து கே.கே.நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் கொலைக்கு குடும்பப் பிரச்னையே காரணம் என தெரியவந்துள்ளது.
 
இறந்த விஸ்நாதனின் தங்கை அமுதா சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த ரௌடி வரதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அமுதா வரதனை விட்டுப் பிரிந்துவிட்டாராம். இதையடுத்து வரதன், சசிகலா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாராம்.
 
இதனால் விஸ்வநாதனுக்கும்,வரதனுக்கும் பகை ஏற்பட்டது. இந்தப் பகையின் காரணமாக வரதன் ஏற்கெனவே விஸ்வநாதனை 3 முறை கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு வரதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
வரதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு விஸ்வநாதனே காரணம் என வரதன் தரப்பினர் நினைத்தனராம். இந்தப் பகையின் காரணமாக விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த வழக்கில் சசிகலா, தண்டபாணி உள்பட 6 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.