செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (09:07 IST)

சென்னை மோனோ ரயில் திட்டம்: பூந்தமல்லி-கத்திப்பாரா வழித்தடத்துக்கு முதல்கட்ட ஒப்புதல்

பூந்தமல்லி முதல் கத்திப்பாரா சந்திப்பு வரையிலான 20.68 கிலோமீட்டர் தொலைவிலான, சென்னை மோனோ ரயில் திட்டத்தின், முதல் வழித்தடத்தை ரூ. 3,267 கோடியில் நிறைவேற்றுவதற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
 
மோனோ ரயில் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவித்தது. வண்டலூர்-ஆவடி-புழல், வண்டலூர்-தாம்பரம் -வேளச்சேரி, பூந்தமல்லி-வளசரவாக்கம்-வடபழனி, பூந்தமல்லி-போரூர்-கத்திப்பாரா சந்திப்பு என நான்கு வழித் தடங்களில் ரூ. 16,650 கோடி செலவில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
 
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதற்கான திட்டப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். நிலங்களைத் தெரிவு செய்வது, நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருவது உள்ளிட்ட பல்வேறு ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொண்டனர். மொத்தம் 34 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
 
ஆனால், இந்தத் திட்டத்துக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் ஒப்புதல் கிடைக்காததால், இந்தத்திட்டப் பணிகள் ஆரம்ப நிலையிலேயே கடந்த மூன்று ஆண்டுகளாக முடங்கிப் போயின.
 
இந்நிலையில், மத்திய அரசு மோனோ ரயில் திட்டத்துக்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை கடந்த வாரம் அளித்துள்ளது. இதில், முதல் கட்டமாக பூந்தமல்லி முதல் கத்திப்பாரா சந்திப்பு வரையிலான 20.68 கிலோமீட்டர் தொலைவு வழித்தடத்தை ரூ. 3,267 கோடியில் நிறைவேற்றுவதற்கான ஒப்புதலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அளித்திருக்கிறது.
 
முழுவதும் மாநில அரசின் நிதியில் அல்லது மாநில நிறுவனங்கள் மூலம் பொது, தனியார் கூட்டு முயற்சியில் வடிவமைத்தல், கட்டுதல், செயல்படுத்துதல் பின்னர் ஒப்படைத்தல் என்ற அடிப்படையில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒப்புதலையே மத்திய அரசு அளித்திருக்கிறது. அதன்படி, இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து எந்தவித நிதியும் கிடைக்கப்போவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
அத்துடஙன், இந்தத் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் வகையில் கட்டணத்தில் சலுகை அளிப்பது, புறநகர் ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து ஆகியவற்றுடன் மோனோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் மத்திய அரசு விதித்துள்ளது.
 
இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, திட்டப் பணிகளை தீவிரப்படுத்தும் முயற்சியை தமிழக அதிகாரிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். 
 
பூந்தமல்லி-கத்திப்பாரா வரையிலான இந்த வழித் தடத்தில் பூந்தமல்லி, போரூர், ராமாவரம், நந்தம்பாக்கம், கத்திப்பாரா சந்திப்பு உள்பட மொத்தம் 16 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.