1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 8 ஜூலை 2015 (06:11 IST)

அதிமுகவிடம் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்: பொது மக்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்

அதிமுகவிடம் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள் என தமிழக மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்த  திமுக தலைவர் கருணாநிதியை பாராட்டி, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலந்தூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்திற்கு, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சென்னை மேயருமான மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
 
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு  பேசியதாவது:-
 
அண்ணா இருந்தபோது, திமுக பொதுக் கூட்டங்களில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை தொகுத்து விளக்கி கூறுவார். அது போன்ற பொதுக் கூட்டங்களை மாலை நேர கல்லூரி என்று அவர் கூறுவார். அது போன்ற ஒரு கூட்டமாக இந்த கூட்டத்தை நான் பார்கிறேன்.
 
திமுக ஆட்சியில், மக்களுக்கான திட்டங்களை எவை என அறிந்து தெரிந்து தொடங்கினோம். தேர்தல் அறிக்கையில் கூறியதை முழுவதும் நிகழ்த்தி காட்டிய ஒரே கட்சி திமுகதான். திமுகவை வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று யாராவது மார்தட்டினால், அவர்கள் முதலில் தட்டிப்பார்க்க வேண்டியது மக்களின் நெஞ்சங்களைத்தான்.
 
அதிமுக ஆட்சியில், மக்கள் படும் வேதனைகளை கொஞ்சம் நஞ்சம் அல்ல.
அரசு என்றால், அது மக்களை பாதுகாக்கும் அரசாக இருக்கவேண்டும். ஆனால், நடைபெற்று கொண்டிருக்கும் அரசு அப்படியா உள்ளது. மக்களை பாதுகாக்கவில்லை.
 
தமிழகத்தில் திமுக ஆட்சியில், உலக தரத்தில், அண்ணா பெயரில் ஒரு பெரிய நூலகம் சென்னையில் கட்டப்பட்டது. அதன் இன்றைய நிலை  என்ன? தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு நூலகமும் இயங்கவில்லை. இருக்கும் நூலகங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் அண்ணா, பெரியார், அம்பேத்கர் பெயரில் இருந்தாலே அதை அழிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
 
மெட்ரோ ரெயில் திட்டம் என்பதை கண்டுபிடித்ததே நாங்கள் தான் என்று ஜெயலலிதா கூறியதாக சில பத்திரிகையில் வெளியான செய்திகளை பார்த்தேன். அதை படித்தேன். இந்த பெருமை யாருக்கு சொந்தம்? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.


 

தயவுசெய்து, நீங்கள் ஓய்வெடுத்து உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள். முதலமைச்சர்  என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமானவராக இருக்கக்கூடாது. பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்கவேண்டும்.
 
இந்தியாவிலேயே முதலமைச்சர் இல்லாத மாநிலம் தமிழ்நாடு தான். அவருக்கு வேலை இல்லை. வேலை செய்ய உடல் நலம் இல்லை. அதனால் எந்த திட்டமும் தொடங்கப்படவில்லை. அவரிடம் ஓ.பன்னீர்செல்வம் மாட்டிக் கொண்டு படாதபாடுபடுகிறார்.
 
திமுக ஆட்சியில் தான் மெட்ரோ ரெயில் திட்டம் வந்தது. விலைவாசி குறைந்தது. ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது, தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கவில்லை. காட்சி தான் நடக்கிறது. எவ்வளவு நாள் தான் பார்த்துக்கொண்டு இருக்கமுடியும்?
 
இது நன்றி அறிவிப்பு கூட்டம். நீங்கள் நன்றி உடையவர்கள் என்றால், எங்களை எத்தனை முறைதான் ஏமாற்றுவீர்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்களும் காத்திருக்கிறோம்.
 
உங்களை ஒருபோதும் நாங்கள் கைவிடப்போவதில்லை. நீங்கள், உங்களை அதிமுகவிடம் இருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைய எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார்.
 
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு மெட்ரோ ரெயில் உருவம் பொறித்த நினைவு பரிசும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.