வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (11:35 IST)

கைப்பந்து வீராங்கனையை காதலித்து ஏமாற்றியதாக சென்னை வங்கி அதிகாரி கைது!

கைப்பந்து வீராங்கனை பிரியங்காவை, காதலித்து ஏமாற்றியதாக கைப்பந்து வீரரும், சென்னை வங்கி அதிகாரியுமான நவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சர்வதேச கைப்பந்து வீராங்கனை பிரியங்கா (26) கடந்த 29 ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
 
அதில், ''சென்னை, மாம்பலத்தில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் கைப்பந்து வீரர் நவீன் என்பவருடன், சர்வதேச அளவில் நடந்த ஒரு கைப்பந்து போட்டியின்போது பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஒருநாள் நவீன் என்னை காதலிப்பதாக கூறினார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததும், அவர் தனது கையை பிளோடால் கிழித்துக் கொண்டார்.
 
இதன் பின்னர் நான் மனம் மாறி அவரை காதலிக்க ஆரம்பித்தேன். அது முதல் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் வசித்து வந்தோம். நவீனின் சொந்த ஊரான சாத்தான்குளம், சுண்டக்கோட்டைக்கும் என்னை அழைத்து சென்றிருக்கிறார். அங்கும் நான் அவருடன் தங்கியிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் என்னை அவரது மனைவி என்றே அறிமுகப்படுத்தினார்.
 
இந்நிலையில், நவீனுக்கும், கோவை போலீஸ் அதிகாரி ஒருவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. திருமணத்தை கோவையில் முடித்துவிட்டு, நவீனின் சொந்த ஊரான சுண்டக்கோட்டையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
 
இதுகுறித்து, நான் நவீனிடம் கேட்டதற்கு, 'எனக்கு பணமும், அந்தஸ்தும் தான் முக்கியம். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது' என்று மறுத்து விட்டார். இதன் பிறகு அடிக்கடி போன் செய்து என்னை மிரட்டுகிறார். அவரது உறவினர்களும் பெங்களூருக்கு வந்து என்னை மிரட்டினார்கள்.
 
எனவே, என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்த நவீன் மீதும், இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்த அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
 
இதையடுத்து, நவீன் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுதல் (417 ஐ.பி.சி.), மிரட்டல் (506(1), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இன்று நவீனை கைது செய்தனர்.
 
இதையடுத்து, நவீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.