வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (23:21 IST)

அரசு விளம்பரம் மூலம் அதிமுக தேர்தல் பிரச்சாரம் - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் சாதனைகளே செய்யப்படவில்லை என்ற நிலையில், அரசு விளம்பரம் மூலம் அதிமுக தேர்தல் பிரச்சாரம் செய்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில் அதிமுக அரசு பதவியேற்று நான்காண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாளிதழ்களில் 4 பக்கம் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதிமுக ஆட்சியில் சாதனைகளே செய்யப்படவில்லை. ஆனால், அரசு விளம்பரம் மூலம் அதிமுக தேர்தல் பிரச்சாரம் செய்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்த செயலாகும். 
 
தமிழக அரசின் சாதனைகள் என்று கடந்த 3 ஆண்டுகளாக என்னென்ன பட்டியலிடப்பட்டனவோ, அவையே தான் இப்போதும் விளம்பரம் செய்யப்படுள்ளது.
 
அந்த விளம்பரத்தில், ஜெயலலிதாவின் ஆற்றல் மிக்க தலைமையில் நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி என்றும் அம்மாவின் ஆட்சி என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது. உண்மையில் மே 15 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்து மே 16 ஆம் தேதி முதல் 5ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது.
 
இதனால், அரசின் சாதனைகள் குறித்த விளம்பரம் கடந்த 16 ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், அப்போது விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் என்று குறிப்பிட வேண்டியிருந்திருக்கும் என்பதால், அதை 10 நாட்களுக்கு தள்ளிவைத்து ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இந்த விளம்பரம் வெளிவந்துள்ளது.
 
விளம்பரங்கள் கூட, தாம் பதவியேற்ற பிறகுதான் வெளியிடப்பட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் தன்முனைப்பையே இது காட்டுவதாக கருதலாம். 
 
அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் படங்கள் இடம் பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்ற அறிவுரையை பின்பற்றி விளம்பரத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெறவில்லை என்றாலும், ஒட்டுமொத்த விளம்பரமுமே ஜெயலலிதாவின் புகழ்பாடும் வகையில் அமைந்துள்ளது. 
 
மேலும், என்றும் அம்மாவின் ஆட்சி என்ற வாசகத்தின் மூலம் அரசு விளம்பரம் அதிமுகவின் பிரச்சார விளம்பரமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் சாதனை விளம்பரத்தில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என்பதிற்கு இதை உதாரணமாக எடுத்தக் கொள்ளலாம்.  
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. இன்னும் ஓராண்டில் அதிமுக அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், எந்த அடிப்படையில் என்றும் அம்மா ஆட்சி என அரசு விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர் என தெரியவில்லை.
 
இவ்வாறு கூறியதன் மூலம் அரசு விளம்பரத்தை அதிமுக விளம்பரமாகவும், தமிழக அரசை அதிமுகவின் துணை அமைப்பாகவும் மாற்ற ஜெயலலிதா முயற்சி செய்துள்ளார். இது ஒரு மலிவான விளம்பர உத்தி மட்டுமல்ல, அரசியல் சட்டத்திற்கு எதிரான செயலாகும். 
 
உச்ச நீதிமன்றத்தையும், அரசியல் சட்டத்தையும் மதிக்காமல் அரசு செலவில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில் விளம்பரம் வெளியிடப்பட்டதை அனுமதிக்க முடியாது. 
 
இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்ட, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இந்த விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட தொகையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மேற்கண்ட அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். இதற்கு, தமிழக ஆளுநர் ரோசைய்யா தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.