வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (15:55 IST)

கார்பரேட்களின் ஏஜென்டாக மத்திய அரசு செயல்படுகிறது: வைகோ பேட்டி

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வந்தது மூலம் கார்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்டாக செயல்படுவது தெளிவாகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
கடந்த 2008ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஈழத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் மதிமுக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் வைகோ பேசினார். இதையடுத்து, தேச விரோத குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச விரோத சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜரானார். அவரது வழக்கறிஞர் தேவதாஸ் விசாரணை அதிகாரி மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். இதையடுத்து, விசாரணையை நீதிபதி கயல்விழி ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 
பின்னர் வெளியே வந்த வைகோ அளித்த பேட்டி வருமாறு:- 
 
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நியாயப்படுத்தி அருண் ஜேட்லி பேசுகிறார். இந்த சட்டம் பொதுமக்களை பாதிக்கும் சட்டம். இந்த விஷயம் மக்களுக்கு தெரிய வந்தால் கொந்தளித்து விடுவார்கள். இந்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் கார்பரேட்களின் ஏஜென்டாக மத்திய அரசு செயல்படுவது தெளிவாகிறது.
 
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தேனியில் மார்ச் 1ஆம் தேதி போராட்டம் நடத்துகிறோம். இதில் சமூக சேவகர் மேதா பட்கர் கலந்துகொள்கிறார். இவ்வாறு வைகோ கூறினார்.