வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (08:46 IST)

எந்த வகையிலும் வரவேற்க முடியாத ரயில்வே பட்ஜெட்: கருணாநிதி கருத்து

மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட், எந்த வகையிலும் வரவேற்க முடியாத பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இந்தியா முழுவதிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் கட்டண குறைப்பு இல்லை என்று தெரிந்து விட்டது. கடந்த ஆண்டு பாஜக அரசின் ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை; “கடந்த கால அரசின் முடிவு அது” என்று கூறி அறிவித்தார்கள்.
 
அதற்குப் பிறகு டீசல் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் இந்த ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் குறைத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டும் குறைக்கப்படவில்லை.
 
கடந்த 8-2-2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலே கூட, தமிழகத்திற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 24 ரயில்வே திட்டங்களும் நிறைவேற போதுமான நிதியினை வருகின்ற ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் இந்தப் பட்ஜெட்டிலும் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
 
இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே இந்த முறைதான் முதல் தடவையாக புதிய ரயில்களோ, கூடுதல் ரயில்களோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஈரோடு - பழனி ரயில் திட்டம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி, இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக்கொண்டிருந்தேன்.
 
ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் புதிய ரயில்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள்.
 
புதிய திட்டங்களை அறிவிக்காததோடு பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. எனவே, எந்த வகையிலும் வரவேற்க முடியாத பட்ஜெட்டாகவே மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.