வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 21 நவம்பர் 2015 (14:57 IST)

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரண வழக்கு - அறிக்கை தாக்கல்; யுவராஜூக்கு அடையாள அணிவகுப்பு

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் மரணம் தொடர்பான, தங்களின் விசாரணை நிலவர அறிக்கையை, சிபிசிஐடி காவல் துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
 

 
தலித் இளைஞர் கோகுல்ராஜ், தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு இளம் பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா, கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
 
அவரது மரணத்திற்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில், அதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனிடையே, டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
 
அதில், விஷ்ணுபிரியா வழக்கை திசைதிருப்பும் வகையிலும், அதன் வேகத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும் காவல்துறையினர் தவறான செய்திகளை பரப்பி வருவதாகவும், தங்களது துறையைச் சார்ந்த அதிகாரிகளை காப்பாற்றும் நோக்குடன் சிபிசிஐடி போலீசார் ஒருதலைபட்சமாக, சார்புத் தன்மையுடன் விசாரணை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
 
மேலும், எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி.யின் தலையீடு இருப்பதால் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறதா அல்லது வெறும் கண்துடைப்பா? என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது; போலீசார் சாட்சிகளை மிரட்டுகின்றனர்.
 
எனவே, எனது மகள் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும்; விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், சிபிசிஐடி விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கூறியதுடன், வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
 
சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்வதற்கு, அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு மனுதாரர் ரவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எதிர்ப்பு தெரிவித்தார். அறிக்கை தாக்கல் செய்தால் அதன் நகலை தங்களுக்குத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, நவம்பர் 20-ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன்படி வெள்ளியன்று உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தனது விசாரணை நிலவர அறிக்கையை, தாக்கல் செய்துள்ளது.
 
இந்த அறிக்கையில் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விளக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கோகுல்ராஜ் வழக்கில்அடையாள அணிவகுப்பு இதனிடையே கோகுல்ராஜ் கொலை வழக்கில், வெள்ளியன்று வேலூர் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
 
கோகுல்ராஜ் கொலை வழக்கில், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனத் தலைவர் யுவராஜ் (37) உட்பட பலரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், தற்போது குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
 
இதையொட்டி, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜின் முக்கியக் கூட்டாளியும், ஓட்டுநருமான அருணுக்கு கடந்த வாரம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
 
இவ்வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ள கோகுல்ராஜின் தோழி சுவாதி, இந்த அணிவகுப்பின்போது, அருணை அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜூக்கும் வெள்ளியன்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இங்கும் கோகுல்ராஜின் தோழி சுவாதி, கொலையாளியை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து வரப்பட்டிருந்தார்.