1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (11:16 IST)

தமிழக இளைஞரை சுட்டுக் கொன்ற வன அதிகாரி மீது நடவடிக்கை தேவை - ராமதாஸ்

காவிரி எல்லைப் பகுதியில் தமிழக இளைஞரை சுட்டுக்கொன்ற வன அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மாதேஸ்வரன் மலையை ஒட்டிய காவிரி எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்ற இளைஞர் கர்நாடக மாநில வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, இராஜா ஆகியோருடன் பழனி கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருமாநில எல்லைப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
 
அப்போது அங்கு வந்த கர்நாடக மாநில வனத்துறையினர் பால்ரஸ் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவரும் காயமடைந்தனர். அவர்களில் முத்துசாமி, இராஜா ஆகியோர் தப்பி வந்துவிட்ட போதிலும், பழனியை மட்டும் காணவில்லை.
 
அவரை தேடிவந்த அப்பகுதி மக்கள், கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் உருக்குலைந்த நிலையில் பழனியின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
 
பழனியின் இடது கை வெட்டப்பட்டும், பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டும் இருந்ததுடன், தலையில் வெட்டுக்காயங்களும், மார்பில் குண்டு பாய்ந்த காயங்களும் காணப்பட்டன. கர்நாடக வனத்துறையினர் பழனியை பிடித்து சித்திரவதை செய்து, கடைசியில் சுட்டுக்கொன்றுவிட்டனர் என்று தெரியவந்திருக்கிறது.
 
தமிழ் இளைஞர் பழனி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது சேலம் மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மாதேஸ்வரன் மலைப் பகுதிக்கான உதவி வனப்பாதுகாவலராக உள்ள வாசுதேவ மூர்த்தி என்ற அதிகாரி தான் இந்த படுகொலைக்கு பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இருமாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளோ அல்லது இரு மாநில மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளோ இந்த படுகொலைக்கு காரணம் இல்லை; மாறாக வாசுதேவ மூர்த்தி என்ற வனத்துறை அதிகாரியின் அரக்கத்தனமான அணுகுமுறை காரணமாகவே பழனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வனத்துறை அதிகாரியின் மனிதநேயமற்ற இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தப் படுகொலைக்கு காரணமான  வனப் பாதுகாவலர் வாசுதேவமூர்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பழனி கொல்லப்பட்டதால் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ள நிலையில், அவரது குடும்பத்தில்  ஒருவருக்கு அரசு வேலையும், நிதி உதவியும் வழங்க தமிழக - கர்நாடக அரசுகள் முன்வர வேண்டும்.“ இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.