வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (09:42 IST)

கார் மரத்தில் மோதி கோரவிபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

ஊத்தங்கரை அருகே தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆலங்காயம் அருகே உள்ளது ஓமகுப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வில்சன். இவருக்கு வயது 53. இவர் ஓமகுப்பத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரெஜினாமேரி. இவர்களுக்கு ஜோயல் என்ற 7 வயது மகனும், ஜோனிடா என்ற மகளும் இருந்தனர்.
 
இந்நிலையில் திருவண்ணாமலை அருகே கீழ்பென்னத்தூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று நடந்த ஞானஸ்தான விழாவில் பங்கேற்க வில்சன் தனது குடும்பத்தினருடன் அதிகாலையில் ஒரு காரில் புறப்பட்டார். இவர்களுடன் வில்சனின் தாய் சுசீலா, அக்காள் செல்வி என்கிற பிரேமகுமாரி, தங்கை ஜாய்சி ஆகியோரும் சென்றனர். இந்த காரை சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வில்சனின் உறவினர் திலீப்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார்.
 
அவர்கள் சென்ற கார், நேற்று காலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகேயுள்ள நாற்சாம்பட்டி அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுநர் திலீப்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த கார் சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தில் மோதியது.
 
இந்த விபத்தில், காரில் இருந்த ஓட்டுநர் திலீப்குமார் உள்பட 8 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  ஆனால், வில்சன், அவரது மனைவி ரெஜினாமேரி, மகன் ஜோயல், மகள் ஜோனிடா, வில்சனின் தாய் சுசீலா, அக்காள் செல்வி என்கிற பிரேமகுமாரி, தங்கை ஜாய்சி ஆகிய 7 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மேலும், படுகாயம் அடைந்த ஓட்டுநர் திலீப்குமார் உயிருக்குப் போராடிக் கொண்டுடிருந்தார்.
 
அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு, காவல்துறையினர் விரைந்து வந்தார்கள். பின்னர் அவர்கள், விபத்தில் பலியான வில்சன் உள்பட 7 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான இடத்திற்கு கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டது. அந்த வாகனத்தின் மூலம் விபத்துக்குள்ளான கார், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சிங்காரபேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 
விபத்தில் பலியான வில்சனின் மனைவி ஜெரினா மேரி ரெட்டிவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். வில்சனின் தாய் சுசீலா ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.  மேலும் சகோதரி செல்வி அங்கன்வாடி பணியாளராக இருந்து வந்தார். குழந்தைகள் ஜோயல், ஜோனிடா ஆகியோர் பள்ளியில் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.