1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (18:25 IST)

கேப்டன் விஜயகாந்த் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா?

2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழகத்தில் வரும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் இடம் பெற்று, தேர்தலை சந்தித்தன.

 
இதில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நரேந்திர மோடியை நேரடியாகவே விமர்சித்ததன் மூலம், கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும், நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளருக்கு தேமுதிக பெயரளவிற்கு மட்டுமே ஆதரித்தது.
 
பாமகவோ இந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் மட்டுமின்றி, வேறு யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்தது. இந்நிலையில், பாமகவின் முதல்வர் வேட்பாளராக  டாக்டர் அன்புமணி ராமதாஸை அறிவித்தது. இதனால் பாஜக கூட்டணிக்குள் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என அறிய முடியாத அளவிற்குதான் இருக்கின்றன.
 
இந்நிலையில் தேமுதிக இளைஞர் அணி செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
 
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும், இவ்வாறு பாஜக அறிவிக்காத பட்சத்தில் தேமுதிகவின் முடிவுகள் வேறு மாதிரியாக அமையும் என தெரிவித்துள்ளாதாகவும் தெரிகிறது.