வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2016 (10:39 IST)

கிரானைட் மலையை பேச்சில் மறைக்க முடியாது! - ஜி.ஆர். தாக்கு

இருவரும் தங்களது பேச்சில் கிரானைட் கொள்ளையை மறைக்க முயற்சிக்கிறார்கள்; ஆனால் உண்மையில் இந்த மெகா கொள்ளைக்கு அதிமுகவும், திமுகவுமே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
 

 
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை மாவட்டத்தில் வெள்ளியன்று ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
முன்னதாக, வெள்ளியன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், "கிரானைட் கொள்ளை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் நலக் கூட்டணியும் தொடர்ச்சியாக பிரச்சனை எழுப்பிவரும் நிலையில், அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஜெயலலிதாவுக்கும், ஸ்டாலினுக்கும் ஏற்பட்டுள்ளது.
 
இருவரும் தங்களது பேச்சில் கிரானைட் கொள்ளையை மறைக்க முயற்சிக்கிறார்கள்; ஆனால் உண்மையில் இந்த மெகா கொள்ளைக்கு அதிமுகவும், திமுகவுமே காரணம்” என்று கூறினார்.
 
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் விரிவான அறிக்கையையும் அவர் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, கிரானைட் முறைகேடு பற்றிய விசாரணையில் அதிமுகதான் நடவடிக்கை எடுத்ததென்று கூறியுள்ளார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த முதலில் உத்தரவிட்டது திமுகதான் என்று முதல் முறையாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
விசாரணை நடத்த உத்தரவிட்டது யார்? உண்மையை வெளியே கொண்டுவந்தது யார்? என்பதில் இரு கட்சிகளுக்கும் போட்டியில்லை. உண்மையில் முறைகேட்டின் மூலம் பலனடைந்தது யார்? மூடி மறைத்தது யார் என்பதில்தான் இரு கட்சிகளுக்கும் போட்டி. கடந்த 25 ஆண்டுகளில் அதிமுக மூன்று முறையும் திமுக இரண்டு முறையும் ஆட்சியில் இருந்துள்ளன.
 
20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரானைட் மலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மொட்டையடிக்கப்பட்டுள்ளன. இதை கண்டுகொள்ளாமல் இருந்ததில், முறைகேடு செய்தவர்கள் மூலம் ஆதாயம் பெற்றதில் இரு கட்சிகளுக்கும் சம பங்குண்டு.
 
முதலில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதில் உள்ள முரண்பாடுகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்:
 
ஜெ. கூறியது: “மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையில் 176 கிரானைட் குவாரிகளுக்கு குத்தகை அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டுவரை 36 குத்தகை அனுமதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
 
2003- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 139 குத்தகை அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
”உண்மை என்ன?: மாநிலத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற 2001- 2006 ஆண்டுகளில் 77 குத்தகை அனுமதிகளும், திமுக ஆட்சி நடைபெற்ற 2006-2011-ஆம் ஆண்டுகளில் 68 குத்தகை அனுமதிகளும் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
 
கிரானைட் முறைகேட்டில் இரண்டு கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. மத்திய அமைச்சரவையில் திமுகவும், மாநில ஆட்சியில் அதிமுகவும் இருந்தபோதும், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக செயல்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.