வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (18:22 IST)

ஆசிரியை, மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லையா? - காவல் துறையினரை கடிந்த நீதிபதி

ஆசிரியை, மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லையா? - காவல் துறையினரை கடிந்த நீதிபதி

பள்ளியிலிருந்து மாயமான ஆசிரியையும், மாணவனையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா என்று காவல் துறையினருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

 
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (16) என்ற மாணவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
மாணவன் சிவசுப்பிரமணியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆசிரியை கோதைலட்சுமி [26] என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இந்த காதல் விவகாரம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வரவே, ஆசிரியையை கண்டித்துள்ளதோடு, மகனுக்கு அறிவுரையும் கூறியுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்த மாணவன் கடைசித் தேர்வு எழுதி முடித்தக் கையோடு ஆசிரியையும், மாணவனும் அங்கிருந்து மாயமாகினர்.
 
இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதில், தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும், வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
 
மேலும், மாயமான தனது மகனை கண்டுபிடித்து ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மாரியம்மாள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, புளியங்குடி துணை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப்படை அமைத்து மாயமான மாணவன், ஆசிரியை ஆகியோரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
அதன்பின்பு, இந்த வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்த போதும், ஆசிரியை மற்றும் மாணவனை காவல்துறையினர் கண்டுபிடித்து ஆஜர்படுத்தவில்லை. விரைவில் கண்டு பிடித்து ஆஜர்படுத்துவோம் என்று காவல்துறையினர் உறுதி அளித்தனர்.
 
இந்தநிலையில் இன்று அந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.சுபாஷ்பாபு, சுசிகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
 
அப்போது அரசு வக்கீல், மாயமான ஆசிரியை மற்றும் மாணவனை விரைவில் கண்டுபிடித்து விடுவதாக தெரிவித்தனர்.
 
அதற்கு நீதிபதிகள், ”ஒவ்வொரு முறையும் விரைவில் கண்டுபிடித்து விடுவதாகத்தான் கூறுகிறீர்கள். ஆனால், உங்களால் மாயமான ஆசிரியை, மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், சி.பி.சி.ஐ.டி. போன்ற வேறொரு விசாரணை அமைப்புக்குதான் மாற்ற வேண்டும்” என்று தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
 
அதன்பின்பு மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், இந்த வழக்கை வேறொரு விசாரணை அமைப்புக்கு மாற்றும்படி மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கூறி விசாரணையை வருகிற 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.