வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (20:48 IST)

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை நிறைவேற்ற பாஜக உறுதிமொழி அளிக்குமா? - ஜெயலலிதா கேள்வி

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை நிறைவேற்ற பாஜக உறுதிமொழி அளிக்குமா? என்று மத்திய சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
 
மக்கள் பணத்தை கொள்ளை அடித்து, ஊழல் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும், தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்த, மத்திய காங்கிரஸ் அரசை ஆதரித்த திமுகவை விரட்டி அடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இங்கே நீங்களெல்லாம் கூடி இருப்பதை பார்க்கும் போது, நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
 
தற்போது இருப்பது போன்ற மோசமான நிலையை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நாம் பார்த்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. அந்த அளவுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. எந்த ஊழலை எடுத்தாலும், ஒரு லட்சம் கோடி ரூபாய், இரண்டு லட்சம் கோடி ரூபாய் தான். இந்த ஊழல் மத்திய அரசை இப்படியே விட்டால் இந்திய நாட்டை முழுமையாக சூறையாடி விடுவார்கள். எனவே, இந்த ஊழல் மத்திய அரசை ஒழிப்பதே நமது முதல் குறிக்கோள்.

சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த அரசு, அதிமுக அரசு. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மாநகர மக்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் புதிய வீராணம் திட்டம் எனது முந்தைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. வீராணம் திட்டத்துடன் நிற்காமல், மீஞ்சூர், காட்டுப்பள்ளி கிராமத்தில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும், என்னால் 2005 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கான ஆணை வழங்கப்பட்டு இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.
 
2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மந்த கதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதால், 2010 ஆம் ஆண்டு தான் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மத்திய அரசின் 1,000 கோடி ரூபாய் நிதி உதவியுடன் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதோ 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான். இதன்படி, நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் பணிகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டன. 
 
முந்தைய மைனாரிட்டி திமுக அரசு ஆட்சியிலிருந்து விலகும் போது வெறும் 25 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தன. பின்னர் நான் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு, இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு இந்த திட்டம் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்னால் தொடங்கிவைக்கப்பட்டது.
 
சென்னை மாநகரின் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு 1,000 கோடி ரூபாய் மதிப்பில் நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இது மட்டுமல்லாமல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூர் என்ற இடத்தில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
 
தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு கண்டலேறு, பூண்டி கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் 93 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
 
மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வசதிகளை கடந்த 34 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம்.
 
இது போன்று, பல்வேறு பணிகளை மத்திய சென்னை தொகுதி மக்களுக்கு நாங்கள் செய்து கொடுத்துள்ளோம். இன்னும் பல்வேறு பணிகளை உங்களுக்கு செய்து கொடுக்க இருக்கிறோம்.
 
நரேந்திர மோடி தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சனையை தீர்க்க 2 விஷயங்களை சொல்லியிருக்கிறார். மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்க்க ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மற்றொன்று நதிகள் இணைக்கப்பட வேண்டும். இவற்றின் மூலம் காவிரி பிரச்சனையை தீர்ப்பதாக சொல்லியுள்ளார். கர்நாடகாவில் பல ஆண்டுகால வரலாறு, பேச்சு வார்த்தைகள் கலைத்து தமிழகத்தை வஞ்சிப்பதுதான். இந்த ஏமாற்று வேலையைத்தான் திமுகவும் செய்கிறது. 

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை வழங்கிய பின்னர், அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுதானே நியாயம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் இறுதி ஆணை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை பாஜக அளிக்குமா? என்று நான் கேட்டால், அதற்கு பதில் அளிக்காமல் இரு மாநில பிரச்சனையை தீர்க்க ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது பிரச்சனையை திசை திருப்பும் செயலாகும்.
 
அதே போன்று, மகாநதி, கோதாவரி, காவிரி இணைப்பினை மேற்கொள்வதற்கான உத்தரவாதத்தை அளிக்க பாஜக ஏன் தயங்குகிறது? தமிழகத்தில் நதிகளை இணைப்பதற்கு தேவையான நிதியை அளிப்போம் என்ற உறுதியைக்கூட பாஜக ஏன் அளிக்கவில்லை?. இவை எல்லாம் போகட்டும். காவிரி நீதிமன்ற நடுவர் ஆணைக்கு இணங்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தைக்கூட பாஜகவால் அளிக்க முடியவில்லையே? எனவே, காவிரி நதிநீர் பிரச்சனையில் பாஜகவால் எந்வொரு நன்மையும் ஏற்படாது. இதுதான் உண்மை. 
 
காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு உரிய உரிமையை பெற்றுத்தரக்கூடிய ஒரே இயக்கமான அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
அண்மையில் கன்னியாகுமரி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, தமிழக மீனவ பிரச்சனைக்கு நானும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியும் மோதிக்கொள்வதே காரணம் என்று கூறியுள்ளார். ஆனால், ராமநாதபுரத்தில் அவர் பேசும்போது, குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் சிறைப்பிடிப்பதற்கும், தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைப்பிடிப்பதற்கும் காரணம் மத்தியில் வலிமையான அரசு இல்லாததுதான் என்று கூறியிருக்கிறார். நரேந்திர மோடியின் கன்னியாகுமரி பேச்சை வைத்து பார்க்கும்போது, குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் அரசு சிறைப்பிடிப்பதற்கு காரணம் நரேந்திர மோடியும், சோனியாகாந்தியும் மோதிக்கொள்வதுதான் என்று எடுத்துக்கொள்ளலாமா?
 
தமிழக மீனவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரே இயக்கமான அதிமுக வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காள பெருமக்களாகிய உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வாக்காள பெருமக்களே ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். எந்த பிரச்சனையானாலும் அதிமுகதான் துணை நிற்கும். உங்கள் அன்பு சகோதரியாகிய நான் தான் என்றென்றைக்கும் உங்களுக்கு துணையாக நிற்பேன். சில தலைவர்கள் இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சார கூட்டங்களை, சுற்றுப்பயணத்தை அறிவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரச்சாரம் செய்யும் நாட்களை விட ரத்து செய்யும் நாட்கள்தான் அதிகமாக இருக்கிறது.
 
ஆனால், என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நான் வருகிறேன் என்று சொன்னால் நிச்சயமாக வருவேன். உங்களை சந்திக்கிறேன் என்று சொன்னால் நிச்சயமாக உங்களை சந்திப்பேன். இன்று எனக்கு கடுமையான காய்ச்சல் உள்ளது. ஆனால், நான் பிரச்சாரத்தை ரத்து செய்யவில்லை. வருகிறேன் என்று வாக்களித்துவிட்டேன். அதனால், மாத்திரை போட்டுக்கொண்டு உங்களை சந்திக்க இங்கே வந்திருக்கிறேன். அதுதான் அதிமுக அதுதான் உங்கள் அன்பு சகோதரி.
 
24.4.2014 அன்று நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலில், அதிமுகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச்செய்ய வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.