வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (15:46 IST)

கூட்டுத் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு அளித்த தீர்ப்பைப் போன்றதுதான் இடைத் தேர்தல் வெற்றி: கருணாநிதி

நீதிபதி குமாரசாமி கூட்டுத் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு அளித்த தீர்ப்பைப் போன்றது தான் இந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் மிகுந்த நேர்மையுடனும் (?), தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான மேற்பார்வையுடனும் (?), எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கிடையே (?), எந்தவிதமான அமைச்சர்களின் ஆர்ப்பாட்டமுமின்றி (?), எதிர்க் கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கெல்லாம் முறையாக ஜெயலலிதா பதிலளித்து (?) தேர்தல் ஆணையம் – காவல்துறை – அதிமுக எனும் முத்தரப்புக் கூட்டணி அமைத்து, ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டாராம்.
 
2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றி “முன்னோட்டமா” என்பதற்கு இன்றைய ஆங்கில நாளிதழ், ஒரு களத்தில் வெற்றி ஆனால் முழுப்போர் இன்னும் முடியவில்லை; சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால், சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டம் என்று சொல்வது சிறிதும் பொருத்தமில்லாதது. இடைத்தேர்தல் முடிவுகளும் பொதுத் தேர்தல் முடிவுகளும் அடிப்படையிலேயே வித்தியாசமானவை; எனவே அவற்றை ஒப்பிட முடியாது என்று பதில் கூறியுள்ளது.
 
எனவே அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு, அத்தனை அமைச்சர்களையும் அல்லும் பகலும் தெருவிலே ஓட விட்டு, பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாம் "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்பதற்கொப்ப களத்தில் நிற்காத நிலையில், தேர்தல் கமிஷனின் தோளில் கை போட்டுக் கொண்டு பெற்றது வெற்றி தானா? நீதிபதி குமாரசாமி கூட்டுத் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு அளித்த தீர்ப்பைப் போன்றது தான் இந்த இடைத் தேர்தல் வெற்றி! வெறும் காற்றில் வாள் வீசி வீராப்பு பேசி எகிறிக் குதிப்பதைப் போன்றது தான் இந்த வெற்றியும்!
 
ஆனால் இந்த வெற்றி, அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று ஜெயலலிதா தனது நன்றி அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போது எரிச்சலும் சிரிப்பும் தான் மாறி மாறி வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.