வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2016 (03:05 IST)

மத்திய பட்ஜெட் - தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய பட்ஜெட் - தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய பட்ஜெட்டில், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
இது குறித்துதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாத அதே நேரத்தில் புதிய ரயில்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குறிப்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை - மகாபலிபுரம் - புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் புதிய ரயில் திட்டம் தொடங்குவதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல விருதுநகர் - கொல்லம் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றுவதற்கும் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை - போடி ரயில் பாதை, விழுப்புரம் - மதுரை இரட்டை வழிப்பாதை அமைத்து மின்மயமாக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

தமிழகத்தில் பெரிய நகரங்களையொட்டி சிறுசிறு நகரங்கள் உருவாகி வருகின்றன. இந்த பகுதிகளில் மக்கள் அதிகளவில் குடியேறி வருகிறார்கள். பெரிய நகரங்களோடு இத்தகைய சிறிய நகரங்களை இணைக்க மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உள்ளது.

இக்கோரிக்கையை பரிசீலிக்கக் கூட மத்திய ரயில்வே அமைச்சகம் தயாராக இல்லை. இந்நிலையில் சென்னை - அரக்கோணம் - செங்கற்பட்டு நகரத்தை இணைக்கும் வட்ட ரயில்பாதை அமைப்பது குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழிப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் ரயில்வே அமைச்சரின் உரையில் இல்லை.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பாண்டியன், வைகை போன்ற விரைவு ரயில்களின் வேகம் 50 முதல் 60 கி.மீ.க்கு மேல் செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்த ரயில்களில் மிகமிக பழமையான ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பதால் இந்த ரயில்களில் பயணம் செய்வதை பயணிகள் கூடுமானவரையில் தவிர்த்து வருகிறார்கள்.

பொதுமக்கள் விரும்புவது விரைவு ரயில்கள், தரமான ரயில் பெட்டிகள், சுத்தமான கழிவறைகள், பாதுகாப்புடன் பயணம், நவீன வசதிகள் ஆகியவற்றுக்கு ரயில்வே பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசை பா.ஜ.க. அரசை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு தேவையான ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசோடு வாதாடி பெறுவதற்கு தயங்குவது ஏனென்று தெரியவில்லை.

இந்நிலையில் தமிழக ரயில் திட்டங்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவதோடு தமது கடமை முடிந்துவிட்டதாக கருதி, கண் துடைப்பு நாடகம் நடத்தி வருகிறார்.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் மூலமாக தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது. இதற்குரிய பாடத்தை வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பெறுவதிலிருந்து தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.