வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 28 நவம்பர் 2015 (15:32 IST)

’பெருமாள் முருகனிடம் கையெழுத்து வாங்கியது அரசியல் சாசனத்தை மீறிய செயல்’ - நீதிமன்றத்தில் வாதம்

எழுத்தாளர் பெருமாள் முருகனைக் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கப்பட்ட ஒப்பந்தம் அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
 

 
பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று சில சாதிய, மதவாத அமைப்புகளால் கிளப்பிவிடப்பட்டதும், எழுத்தாளர் அச்சுறுத்தப்பட்டதும், வருவாய்த் துறை அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதும் தெரிந்ததே.
 
அப்போது நிலவிய சூழலில் பெருமாள் முருகன் அந்த நாவலைத் திரும்பப்பெற்றுக் கொள்வதாகவும், தொடர்ந்து அதை விற்பனை செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
 
அந்த ஒப்பந்தம் பெறப்பட்ட விதத்தை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷோர் கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 
வழக்குரைஞர் ச.செந்தில்நாதன் வாதிடுகையில், "அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எவ்விதத்திலும் தடை போட முடியாது. மேலும், நாமக்கல்லில், எழுத்தாளரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, எதிர்த்தரப்பினர் 7 பேருக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
 
ஆனால் பெருமாள் முருகன் தனி மனிதராக அங்கே இருக்க, 30க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். இத்தகைய பின்னணியில் அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு செய்ததல்ல" என்று கூறினார்.
 
பெருமாள் முருகன் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் சஷீஷ் பராசரன், ’அரசுத்தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தை நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டது என்றாலும் அது அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக இருந்து விட்டது’ என்றார்.