1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 30 ஜூலை 2014 (12:38 IST)

இலங்கை விவகாரத்தில் பா.ஜ.க. சுப்பிரமணிய சாமியை ஒதுக்க வேண்டும் - ராமதாஸ்

இலங்கை விவகாரத்தில் பா.ஜ.க. அரசு சுப்பிரமணிய சாமி போன்ற சக்திகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
"இலங்கைத் தலைநகர் கொழும்பில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிங்கள அரசின் சார்பில் பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் இந்தியா சார்பில் ராணுவ உயரதிகாரிகளும், சுப்பிரமணிய சாமி, சேஷாத்திரி சாரி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்களும் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
 
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும்; அது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், இலங்கை தொடர்பான இந்திய அரசின் முடிவுகள் அனைத்துமே ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன.
 
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க முடியாது, ஐ.நா. மனித உரிமை ஆணைய போர்க்குற்ற விசாரணைக்குழுவுக்கு இந்தியாவுக்குள் நுழைய விசா வழங்க முடியாது என்பன போன்ற முடிவுகளைத் தொடர்ந்து இலங்கை அரசு நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க இந்தியா முடிவு செய்திருப்பது தமிழர்களுக்கு ஆறா மனக் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்கவிருக்கும் பாரதீய ஜனதாவின் உத்தி வகுப்புக் குழுத் தலைவர் சுப்பிரமணிய சாமி, வெளியுறவுக் கொள்கை வகுப்புக் குழுவின் அமைப்பாளர் சேஷாத்திரி சாரி ஆகிய இருவருமே தொடக்கத்திலிருந்தே இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். கச்சத்தீவு இலங்கைக்குத் தான் சொந்தம் என்றும், வங்கக்கடலில் மீன் பிடிக்கும் விஷயத்தில் தமிழக மீனவர்கள் தான் தவறு செய்கிறார்கள் என்றும் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
 
அண்மையில் இலங்கை சென்ற இவர்கள் இருவரும் ஐ.நா. போர்க்குற்ற விசாரணையில் இலங்கைக்கு ஆதரவாகத் தான் இந்தியா நடந்து கொள்ளும் என்று இராஜபக்சேவிடம் வாக்குறுதி அளித்துவிட்டு திரும்பினர். அதுமட்டுமின்றி, 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கையில் நடந்த அனைத்து பாதுகாப்பு கருத்தரங்குகளிலும் சுப்பிரமணிய சாமி பங்கேற்று சிங்களப்படையினரின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்திப் பேசி வந்திருக்கிறார். இந்த கருத்தரங்கில் இந்தியா கலந்து கொள்வதற்கு இவர்கள் இருவரின் தவறான ஆலோசனைகள் தான் காரணமாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
 
பாதுகாப்புக் கருத்தரங்குகளை இலங்கை நடத்தத் தொடங்கியதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. இலங்கைப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தீவிரமடைந்தது. அப்போது தான் முதல் பாதுகாப்பு கருத்தரங்கை இலங்கை நடத்தியது. சிங்களப் படையினர் நடத்தியது மிகப்பெரிய இனப்படுகொலை; போர்க்குற்றம் என்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் கருத்தை மாற்றி, பயங்கரவாத ஒழிப்பு என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதும், உலகில் எங்கெல்லாம் அரசுக்கு எதிரான இயக்கங்கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இதே உத்திகளை கையாள வேண்டும் என்று வலியுறுத்துவதும் இந்த கருத்தரங்கின் நோக்கங்கள் ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக இந்த கருத்துக்கள் தான் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
 
இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இலங்கை பாதுகாப்புக் கருத்தரங்கில் இந்தியா கலந்து கொள்வதும், அந்நாட்டு படைகளை ஆதரித்து பேசுவதும் போர்க்குற்ற விசாரணையில் தமிழர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை கைவிடுவதுடன், இலங்கை விவகாரத்தில் சுப்பிரமணிய சாமி போன்ற சக்திகளை மத்திய அரசு ஒதுக்கி வைக்க வேண்டும்" என கூறியுள்ளார்.