வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2015 (02:37 IST)

பாஜக ஆட்சியில் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு ஆபத்து: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கருத்து

கருத்துரிமைக்கும் பேச்சு சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தமிழக பிரிவு மாநில பொதுச் செயலாளர் முகம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மத்தியில் பாஜக கட்சி ஆட்சிக்கு வந்ததற்கு பின் இந்தியா முழுவதும் கருத்துரிமையும் பேச்சு சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் மீது கருப்பு மை வீசப்படுவதும் தொடர்ந்து நடந்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 
இந்நிலையில், அமைதி பூங்காவான தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கக்கூடிய பாஜக மற்றும் சங்க பரிவார மதவாதிகள் எதிர்கருத்துக்கள் பேசுபவர்களை ஒருமையில் பேசுவதும் நேரலையிலேயே மிரட்டுவதும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.
 
இந்த, நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தங்களுக்கு எதிராக கேள்வி எழுப்பினால் கேள்வி கேட்பவர்களை கீழ்த்தரமாக பேசுவதும் நடைபெற்று வருகிறது. இதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிப்பதோடு இது போன்ற அநாகரிகமாக பேசுபவர்களை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது.
 
மேலும் விவாதங்களில் பங்கெடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.