வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2014 (16:02 IST)

காங்கிரஸ் அரசைப் போல் பாஜக அரசை நினைக்க வேண்டாம்: இலங்கைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

காங்கிரஸ் அரசைப்போல் தற்போதைய மத்திய அரசை நினைக்கவேண்டாம். தவறு நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று இலங்கைக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
சென்னை தியாகராயர் நகரிலுள்ள தமிழக பாஜக அலுவலகத்தில் 5-வது கமலாலய தரிசனம் நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நான் அளித்த உறுதியின் பேரில் அவர்களது போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 94 மீனவர்களும் , 63 படகுகளும் இன்னும் 10 நாட்களில் மீட்கப்படுவார்கள். மீனவர் பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேசியுள்ளேன். மேலும் ராமேசுவரம் மீனவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று சுஷ்மா சுவராஜை சந்திக்கவுள்ளேன்.
 
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில்கள் வருமாறு:-
 
கச்சத்தீவை மீட்க இந்தியா நடவடிக்கை எடுக்குமா?
தமிழக மீனவர்களின் நலனை காப்பதற்காக நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படும். மேலும் இந்த விஷயத்தில் சட்டசிக்கல்கள் உள்ளன. இவை எதிர்காலத்தில் களையப்படும்.
 
இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் மற்றும் பிரதமரை பற்றி இழிவான கருத்து வெளியிடப்பட்டிருந்ததே?
அந்த இணையதளத்தில் தங்களுக்கே தெரியாமல் இந்த கருத்து வெளியானதாக இலங்கை அரசு கூறுகிறது. இது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மீண்டும் இதுபோன்ற தவறு நடந்தால் மத்திய அரசு அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இலங்கை அரசு தற்போதைய இந்திய அரசாங்கத்தை பழைய காங்கிரஸ் அரசை போல் நினைக்க வேண்டாம் என்று கூறினார்.