வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (03:46 IST)

மக்கள் கருத்து கேட்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

தமிழக மக்களின் கருத்துக்களை கேட்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல சட்டப் பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-
 
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றுச் சக்தியாக பாஜக உருவெடுத்து வருகிறது. பீகாரில் சட்ட மன்ற தேர்தல் முடிந்ததும், தமிழக பாஜகவை பலப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் வருகைதர உள்ளனர்.
 
தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது. 234 தொகுதிகளுக்கும் பாஜகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் தேர்தலில் பாஜக கூட்டணியே வெற்றி பெறும்.
 
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக மக்களின் கருத்துக்களை கேட்டு இறுதி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். குறிப்பாக இன்னும் 30 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும். தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார்.