வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 4 மே 2015 (12:38 IST)

மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முதலமைச்சர்கள் தமிழகம் வருகை - தமிழிசை

தமிழகத்தில், மக்கள் குறைகளை கேட்க, மத்திய அமைச்சர்கள் மற்றும் வட மாநில பாஜக முதலமைச்சர்கள் மே 9 ஆம்  தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக மாநில பாஜக தலைவர்  தமிழசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து தமிழக பாஜக தலைவர்  தமிழசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில், மக்களிடம் குறைகளை கேட்டறிய, மத்திய அமைச்சர்கள், வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 29 மத்திய அமைச்சர்களும், மற்றும் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஹரியானா முதல்வர் மனோகர்லால் கத்தார் ஆகிய 3 மாநில முதல்வர்களும் மே 9 ஆம் தேதி தமிழகம் வர உள்ளனர். இவர்கள் தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் சென்று மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற உள்ளனர்.
 
பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் ஒரே நாளில் தமிழகத்துக்கு வருகை தருவது இதுவே முதல் முறை. இந்த அரிய வாய்ப்பு வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத ஒன்றாகும்.
 
எனவே, பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை, அந்தந்த துறை அமைச்சரிடம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பிறதுறை அமைச்சரிடமும் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம். அவ்வாறு பொது மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது  உரியவகையில் பரிசீலனை செய்து அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
மேலும், பிரதமர் நரேந்திர மோடி ஜூன் மாதம் தமிழகத்துக்கு வருகை தர உள்ளார். ஆனால், அவரது வருகை மற்றும் தேதி இறுதி செய்யப்படவில்லை. அது குறித்த விவரம் பின்பு முறையாக அறிவிக்கப்படும் என்றார்.
 
தமிழகத்தில், அதிமுக அசுர மெஜாரிட்டி பலத்தில் ஆட்சி பீடத்தில் இருக்கும் நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் வட மாநில பாஜக முதலமைச்சர்கள் தமிழக மக்கள் குறை கேட்ட வருகை தருவது தமிழகத்தில் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.