வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 26 நவம்பர் 2014 (13:10 IST)

பறவை காய்ச்சல்: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் 20 தனிப்படை மருத்துவக் குழுக்கள்

கேரள மாநிலத்தில் வேகமாகப் பறவை காய்ச்சல் பரவுவதால், கோழிப் பண்ணைகள் அதிக அளவில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில், இந்நோய் பரவாமல் தடுக்க 20 தனிப்படை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு, புன்னமடா, சம்பக்குளம், நெடுமுடி, புறக்காடு, பகவதிபாடம் ஆகிய இடங்களில் வாத்துப்பண்ணைகள் உள்ளன.
 
கடந்த சில நாட்களாக இந்தக் பகுதியில் சுமார் 20 ஆயிரம் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை போபாலில் உள்ள மத்திய வைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
 
ரத்த ஆய்வின் அடிப்படையில் வாத்துகளை ஏவியன் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த வைரஸ் பாதிப்பால் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேரள அரசு சுமார் 2 லட்சம் வாத்துகளை அழிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள்கள் வெளியாகியுள்ளன.
 
இதற்கிடையே பறவை காய்ச்சல் அறிகுறி காரணமாக நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்களும் அச்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000 கோழப் பண்ணைகளில் சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
 
தினமும் சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் 80 லட்சம் முதல் 90 லட்சம் முட்டைகள் தினமும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கேரள சந்தையை நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் பெருமளவு நம்பியுள்ளனர்.
 
ஆயினும், கேரளாவிற்குச் சென்று வரும் வாகனங்கள் மூலம் பறவை காய்ச்சல் தொற்று வந்து விட்டால் கடுமையான இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. 
 
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கால்நடை மருத்துவர்கள், மற்றும் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:– 
 
கேரளாவில் பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட வாத்துக்கள் இறந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் அதிக அளவில் உள்ளதால் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க கால்நடை மருத்துவர்களும், பண்ணை உரிமையாளர்களும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.
 
கோழிப் பண்ணைகளை தீவிரமாக கண்காணிக்க 20 தனிப்படை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் பண்ணைகளை தினசரி கண்காணிக்க வேண்டும்.
 
பண்ணைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பண்ணைகளில் வெளிநபர்கள் வந்து செல்வதை தடுக்க வேண்டும். பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
மேலும் பண்ணைகளில் தேங்கி உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். சாலை ஓரங்களில் கொட்டக் கூடாது. முட்டை அட்டைகளை கிரிமி நாசினி தெளித்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
 
பிளாஸ்டிக் முட்டை அட்டைகளுக்குப் பதிலாக காகித அட்டைகளைப் பயன்படுத்தலாம். பண்ணைகளில் கோழிகள் மொத்தமாக இறந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.