வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (17:29 IST)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் துப்பு துலங்கியது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை.
 
பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்ற போது 2 பெட்டிகளில் குண்டு வெடித்தது.
 
இதில் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் பயணி பலியானார். 40 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
 
இந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
சம்பவத்தன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக சென்னை வந்தது. அதனால் சதி செயலில் ஈடுபட்ட கும்பல் சென்னையை மையமாக வைத்து செயல்படுத்தவில்லை எனவும் அன்றைய தினம் ஆந்திராவில் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அவருக்கு வைக்கப்பட்ட குறி என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
 
வழக்கமான நேரத்தை விட கவுகாத்தி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் குண்டுகள் சென்ட்ரல் நிலையத்தில் வெடித்துள்ளதாக புலன் விசாரணையில் தெரிந்தது.
 
ரயிலில் வெடிகுண்டுகளை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க செய்து மோடி பிரசார கூட்டத்தை முடக்க செய்வதற்காக இந்த சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.
 
ஆனால் இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டது எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது.
 
இந்த நிலையில் சென்ட்ரல் வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிமி இயக்கத்தை சேர்ந்த 6 பேர் என சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர்ப் உறுதிப்படுத்தியுள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி கான்வா ஜெயிலில் இருந்து தப்பி உள்ளனர்.
 
சிமி அமைப்பை சேர்ந்த அம்ஜட், அஸ்லாம், ஜாகீர், மெகபூப், எஜாதின், அபுபைசல் ஆகியோர் சிறையில் டிரில்லர் மூலம் ஒட்டை போட்டு தப்பி உள்ளனர்.
 
ஜெயிலில் தப்பி தலைமறைவாகி உள்ள 6 பேரும் ரயிலில் டைம்பாம் வைத்து நாச வேலையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
 
இந்த கும்பல் ஆந்திராவில் உள்ள வங்கியை உடைத்து கொள்ளை அடித்து பிடிபட்டதாகும். ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 
கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைப்பதற்கு முன்னதாக 4, 5 முறை அந்த ரயிலில் பயணம் செய்து எப்படி குண்டு வைக்கலாம் என சோதனை செய்துள்ளனர்.
 
சிமி இயக்கத்தை சேர்ந்த 6 பேரையும் பிடிக்க தமிழக சி.பி.சி.ஐ.டி. காவல்துறை புதிய வியூகம் வகுத்துள்ளனர். அவர்கள் செயல்பாட்டை பிற மாநில காவைதுறையினர் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர்.