வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 16 டிசம்பர் 2014 (15:23 IST)

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 85 அடியை கடந்தது.


 
 
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சகதிகள் 15 அடி கழித்து மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். மொத்த நீர் கொள்ளவு 32 டி.எம்.சி., ஆகும்.
 
இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் திறந்துவிடும் தண்ணீரால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப்பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது.
 
கடந்த சில மாதங்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அச்சம் நிலவியது.
 
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பருவமழை தொடங்கியதால் அணையின் நீர்வள ஆதாரமான பவானி ஆறு மற்றும் மோயாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நேற்று மாலை 85 அடியை தொட்டது.
இன்று அணையின் நீர்மட்டம் 85.07 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 3457 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 500 கனஅடியும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் வினாடிக்கு 1600 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.