1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 6 மே 2016 (19:22 IST)

திருமாவளவன் மீது தாக்குதல்: வைகோ கடும் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 
 
நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சாவடிக்குப்பத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே கொழைச்சாவடி என்ற இடத்தில் திருமாவளவன் சென்ற வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இந்த தாக்குதல் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில், திருமாவளவன் சாவடிக்குப்பத்தில் பிரச்சாரம் செய்யச் சென்றபோது, வழியில் டிராக்டரை நிறுத்தி அவர் சென்ற வாகனத்தை ஒரு கும்பல் வழிமறித்து, சரமாரியாகக் கற்களை வீசி வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
 
இதில் சகோதரர் திருமாவின் பிரச்சார வாகனம் உள்ளிட்ட இரு வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. காவல் துறையின் வாகனமும் சேதம் அடைந்துள்ளது. திருமாவளவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார். இந்நிலையில், டிராக்டரில் இருந்த 12 பேர் கும்பலை காவல்துறை விரட்டிப் பிடித்து கைது செய்து இருக்கிறது.
 
தாக்குதல் நடத்திய கும்பல் வந்த வாகனத்திலிருந்து பயங்கரமான ஆயுதங்களை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர். இவ்வளவு நடந்தும் கூட எனது அன்புச் சகோதரர் திருமா மிகுந்த பொறுப்புணர்வோடும், சகிப்புத் தன்மையுடனும் இருந்திருக்கிறார். தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு கேடு வரும் சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பெருந்தன்மையுடன் நடந்துகொண்ட திருமாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அதைப்போல தாக்குதலை அலட்சியம் செய்து, கட்டுப்பாட்டுடன் அமைதி காத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் பாராட்டுக்குரியவர்களே!
 
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கோடை வெப்பத்தைக் காட்டிலும் சூடாகி இருக்கிற இந்த வேளையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தொண்டர்களை மிகுந்த பொறுப்புணர்வோடு வழி நடத்த வேண்டிய கடமை இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
 
சகோதரர் தொல்.திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவில் தொகுதி பதற்றம் உள்ளதாக இருக்கும்போதும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.
 
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வாக்கு சேகரித்து வரும் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதுடன், தகுந்த கண்காணிப்பையும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.