வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (09:40 IST)

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழக நிதி நிலை சரியில்லாததால், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப முடியாது என்று தமிழக அரசு  உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில், டி.ஜெகதீசன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நாடாளுமன்றத்தை போல, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக அவற்றை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய சட்டப்பேரவை தலைவருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு ஜூன் மாதம் 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இதையடுத்து நீதிபதிகள், "சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்ச்சியை நேரடி ஒளிப்பரப்பு செய்வது என்பது நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டது. அதேநேரம், இந்த முடிவு எடுப்பது என்பது தன்னாட்சி அமைப்பான மாநில சட்டப்பேரவையின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
 
ஆனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக தனியாக தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
 
அதுபோல, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடியுமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தவேண்டும்" என்று கூறியிருந்தனர்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, தமிழக நிதி நிலை சரியில்லாததால், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தற்போது வாய்ப்பில்லை" என்று கூறினார்.
 
இதையடுத்து நீதிபதிகள், நாடாளுமன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், நிதிநிலை சரியில்லை என்றும் பெரும்பாலான மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதில்லை என்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
 
நிதிநிலை சரியில்லை என்று அவர் கூறுவதை விரிவான பதில் மனுவாக அவர் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.