1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2015 (23:58 IST)

சட்ட மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: பாரிவேந்தர் அறிவிப்பு

வரும் சட்டசபை தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
 

 
தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தஞ்சை மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கலந்து கொண்டு கூறியதாவது:–
 
நமது நாட்டில், அன்றைய காலகட்டத்தில், அதாவது சோழர் காலத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான நீர் நிலைகள் உருவாக்கப்பட்டன. இவற்றை நாம் முறையாக பராமரிப்பு செய்து இருந்தால், நாம் இப்போது யாரிடமும் கையேந்தும் நிலை இருக்காது.
 
தஞ்சை மண்டலத்தில் மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுக்க முயற்சி நடைபெறுகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
 
நமது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். 2020ஆம் ஆண்டு அது 74 சதவீதமாக உயரும். அப்போது இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கு ஏற்ற ஒரே துறை விவசாய துறைதான். அதற்காக இளைஞர்களிடம் விவசாயத்தில் ஆர்வத்தை தூண்ட வேண்டும். அவர்களுக்கு தேவையான வழிகாட்ட வேண்டும்.
 
தமிழகத்தை சீரழிக்கும் சக்தியாக மது உள்ளது. மதுவுக்கு எதிராக தற்போது தமிழகம் முழுக்க பெரும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த பிரச்சனையை முதலில் கையில் எடுத்து போராட்டம் நடத்தியது இந்திய ஜனநாயக கட்சி தான். 
 
கட்சியின் பெரும்பான்மையினர் கருத்தின்படி, வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.