வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2015 (01:32 IST)

பேரறிவாளனை மருத்துவமனையில் சந்தித்தார் அவரது தாயார் அற்புதம்மாள்

சிறுநீரக தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த பேரறிவாளன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரது தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்து பேசினார்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை அறிவிக்கப்பட்ட, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர்.
 
மேலும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவரை அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
 
வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் கூறுகையில், எனது மகன் பேரறிவாளனுக்கு சிறுநீர் தொற்று நோய் கடுமையாக தாக்கியுள்ளது. சிறுநீர் தொற்று நோய் காரணமாக, பேரறிவாளன் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை அளித்துள்ளனர்.
 
சிறுநீர் தொற்றுக்கு, வேலூரில் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் இல்லை. எனவே, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட சிறைத்துறை நிர்வாகம், உயர் சிகிச்சைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு  மருத்துவ சோதனைகள் முதலில் நடத்தப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 
இதனையடுத்து, பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிறுநீரகவியல் துறையில் பொது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், சில நாட்கள் பேரறிவாளன் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுவார் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகிறது.