வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2017 (10:24 IST)

விஜய் ரசிகர் மன்றத்தை நம்பி படிப்பை பறி கொடுத்த கல்லூரி மாணவி..

அரியலூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், நடிகர் விஜய் ரசிகர்களை நம்பி தனது படிப்பை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


 

 
சமீபத்தில் அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக, மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில், அதே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவி ரங்கீலா என்கிற மாணவியின் கதை வேறு மாதிரி இருக்கிறது. அதாவது, பூவிருந்தன்குடி கிராமத்தை சேர்ந்த ரங்கீலா, கடந்த 2015ம் ஆண்டு +2 வகுப்பில் 1058 மதிப்பெண் எடுத்துள்ளார். அதன் பின் , மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட அவருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. 
 
ஆனால், கல்லூரிக்கு சென்ற அவரால் முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்தை மட்டுமே செலுத்த முடிந்தது. அந்நிலையில், இதுபற்றி அறிந்த அப்பகுதி விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலர், ரங்கீலாவுக்கு உதவுகிறோம் எனக்கூறியுள்ளனர். மேலும், விஜய் பிறந்த நாளன்று அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதோடு, தனது குடும்ப புகைப்படத்தையும் அவர்களிடம் ரங்கிலா கொடுத்துள்ளார்.
 
எனவே, எப்படியும் அவர்கள் பணம் கட்டி விடுவார்கள் என நம்பிய ரங்கீலா, இரண்டாம் ஆண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கான கல்விக்கட்டணம், கல்லூரியில் செலுத்தப்படவில்லை. இதனால், அவரை கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிட்டனர்.
 
இதனால், தற்போது வீட்டு வேலை செய்து வருகிறார் ரங்கீலா. படிப்பின் மீது அதிக ஆர்வம் உள்ள அவர், தனது கனவிற்கு ஏழ்மை தடையாக இருப்பதாகவும், தனக்கு யாரேனும் உதவ முன்வந்தால் படிப்பை தொடர்வேன் எனக் கூறி வருகிறார். 

இதே அரியலூரில் உள்ள மாணவி அனிதாவின் விட்டிற்கு சமீபத்தில் நேரில் சென்ற நடிகர் விஜய், அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு பண உதவியும் செய்தார். ஆனால், ரங்கீலாவின் விஷயத்தில் அவரின் ரசிகர் மன்றத்தினர் தவறு செய்துள்ளதால், அவரின் படிப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.