வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (10:03 IST)

நீதிபதிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? பணம் பெற்றுக்கொண்டு தீர்ப்பு - ஜி.ஆர். காட்டம்

ஒருசில நீதிபதிகள், குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். நீதிபதிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
வழக்கறிஞர்களுக்கு எதிராக கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்த சட்டதிருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் சட்டதிருத்த நகலை எரிக்கும் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் வெள்ளியன்று (ஜூலை-1) நடைபெற்றது.
 
இதில் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசும்போது, ”1968ஆம் ஆண்டு கீழவெண்மணியில் 44 தாழ்த்தப் பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாகை நீதிமன்றம் தண்டனை வழங்கியது. ஆனால் இதே சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிக்கு தண்டனையை ரத்து செய்தது.
 
கார் வைத்திருக்கும் அந்தஸ்தான மனிதர் ஏழைகளின் குடிசைக்கு எப்படி தீவைத்திருக்கமுடியும் என்று வினோதமான கேள்வியை எழுப்பியதோடு விந்தையான தீர்ப்பை வழங்கியது. ஒருசில நீதிபதிகள், குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு என்ன ஏற்பாடு உள்ளது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்துமா?
 
நீதிபதிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்கும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான வழக்குகளுக்கு தனி அமர்வு கொண்ட நீதிமன்றத்தை உருவாக்கும் அரசு, தொழிலாளர் பிரச்சனைக்கு ஒரு நாற்காலியை கூட ஒதுக்குவதில்லை.
 
நாடாளுமன்றம் மூலம் கொண்டு வரவேண்டிய திருத்தத்தை சில நீதிபதிகள் கொண்டுவருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது. நீதித்துறையின் பிடிவாதத்தால் தமிழக நீதிமன்றங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் செயல்படாவிட்டாலும் நீதிபதிகளுக்கு சம்பளம் கிடைக்கும்.
 
ஆனால் வழக்கறிஞர்களின் நிலை அப்படியல்ல. இந்த ஜனநாயகப் பூர்வமான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் மத்திய-மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன. வழக்கறிஞர்களின் சுயமரியாதையைப் பாதுகாக்கும் இந்த போராட்டம் வெற்றிபெறும் வரை மார்க்சிஸ்ட் கட்சி வழக்கறிஞர்களுக்கு தோளோடு தோள் கொடுத்து நின்று போராடும்” என்றார்.