வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 17 ஜூன் 2015 (05:02 IST)

தமிழ்நாடு தகவல் ஆணையம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது: ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழக அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களும், மோசடிகளும் வெளியுலகுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, தமிழ்நாடு தகவல் ஆணையம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 
 
தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும் உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு தகவல் ஆணையம். இந்த ஆணையம்  செயல்படாமல் முடங்கிக்கிடக்கிறது. ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்ட ஆணையத்திலேயே ஊழல் பெருகிவிட்டதுடன், வெளிப்படைத் தன்மையும் காணாமல் போய்விட்டது. இது ஜனநாநயகத்திற்கு நல்லது அல்ல.
 
தமிழக அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களும், மோசடிகளும் வெளியுலகுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, திட்டமிட்டு தமிழ்நாடு தகவல் ஆணையம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
 
ஒரு தலைமை தகவல் ஆணையர், 10 தகவல் ஆணையர்கள் என 11 ஆணையர்களைக் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டிய இந்த அமைப்பில், தற்போது வெறும் 4 ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். 
 
இதனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.
 
இவ்வாறு தேங்கிக் கிடக்கும் மேல்முறையீட்டு மனுக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டிவிட்ட போதிலும், முடங்கிக் கிடக்கும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இருப்பதாக தெரியிவில்லை.
 
எனவே, தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் தேர்வுக் குழுவை உடனடியாக கூட்டி, புதிய தலைமை தகவல் ஆணையரையும், தகவல் ஆணையர்களையும் நியமிக்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி, பா.ம.க. சார்பில் ஜூன் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது என அந்த அறிகையில் தெரிவித்துள்ளார்.