வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (16:17 IST)

'இனி மாணவர் புரட்சி காட்டுத் தீயாகப் பரவும்; ஜெயலலிதா ஏமாற்ற முடியாது' - வைகோ

இனி மாணவர் புரட்சி காட்டுத் தீயாகப் பரவும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏமாற்ற முடியாது என்று மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி ஆகஸ்டு 4ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று, பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
தமிழகத்தில் வணிகப் பெருமக்கள் வருமான நட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தாங்களாகவே கடைகளை மூடி, முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்து விட்டனர். இது மக்கள் போராட்டத்தின் வெற்றி, பொதுநலன் கருதும் வணிகப் பெருமக்களின் வெற்றி!  இந்தப் போராட்டத்துக்கு திமுக, பாமக, விக்கிரமராஜாவின் வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவிக்கவில்லை.
 
ஆளும் கட்சி காவல்துறையை ஏவிவிட்டு, நேற்று இரவில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கட்சிகளின் நிர்வாகிகளைக் கைது செய்தனர். இன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் காவல் துறையினர் மதிமுக நிர்வாகிகளையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் தாக்கியதோடு கைது செய்தனர்.
 
தமிழகம் முழுவதிலும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் அடித்தும், உதைத்தும் காவல்துறை வாகனங்களில் ஏற்றி கைது செய்துள்ளனர். இது ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறையாகும். அரசின் அடக்குமுறையை மீறி முழு அடைப்பு வெற்றி பெற்றது என்றால், முழு மதுவிலக்கு ஒன்றுதான் தமிழ்நாட்டை காக்கும் என்பதற்கான மக்களின் பிரகடனம்தான் போராட்டத்தின் வெற்றி.
 
டாஸ்மாக் மதுக்கடைகள், ஒயின் ஷாப்புகளின் மது நச்சு வெள்ளமாகப் பாய்ந்து தமிழ்நாட்டை நாசம் செய்கிறது. இளம் தலைமுறையினர் மது அருந்துவதும், தமிழ்நாட்டின் தொன்மைப் பண்பாட்டுக்கு அடையாளமாக உள்ள தாய்க்குலத்தின் சில பெண்கள்கூடக் குடிப்பழகக்கத்துக்கு ஆளாகும் நிலை நம் நெஞ்சைப் பிளக்கிறது.
 
முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகமே கொந்தளிக்கிறது. கோடானுகோடித் தாய்மார்கள் மதுக்கடைகளை ஒழிக்க வீறுகொண்டு எழும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டுக்கு ஏற்பட இருக்கும் அழிவைத் தடுக்கவே வீரத் தியாகி சசிபெருமாள் உயிர்ப்பலியானார். அவரைச் சாகடித்தது மட்டும் அல்லாமல், கடுகு அளவும் ஈவு இரக்கம் இல்லாமல் சசிபெருமாளின் மகனையும், மகளையும் கைது செய்தது ஜெயலலிதா அரசு.
 
சென்னையில் மாணவர்கள் போராட்டம்:
 
நேற்று ஆகஸ்டு 3 ஆம் தேதி, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற முயன்றபோது, காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். தரையில் விழுந்து கிடந்த கல்லூரி மாணவர்களை ஒரு காவல்துறை அதிகாரி பூட்ஸ் காலால் உதைப்பதைத் தொலைக்காட்சியில் கண்ட அனைவரின் நெஞ்சமும் கொதித்தது.
 
இனி மாணவர் புரட்சி காட்டுத் தீயாகப் பரவும். தமிழகத்தின் தாய்மார்கள் வெகுண்டு எழுந்து வீதிக்கு வருவார்கள். கொள்ளையடித்த ஊழல் பணத்தாலும், இலவசங்களாலும் இனி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, வழிபாட்டுத் தலங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள், மது பார்களை மூடப்போவதாகவும், மது விற்பனை நேரத்தை குறைக்கப் போவதாகவும் தமிழக மக்களை குறிப்பாக தாய்மார்களை ஏமாற்றுவதற்காக ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தயாரித்துள்ளார். அதனை அறிவிக்க உள்ளார்.
 
வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு அருகில் மதுக்கடைகள் கூடாது என்று ஏற்கனவே நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதன்படி ஜெயலலிதா அரசு செயல்பட்டதா? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியதா? இல்லை.
 
மதுக்கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைப்பது என்பது பொதுமக்களை ஏமாற்றவும், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நேரங்களில் அவற்றைக் குடிகாரர்களிடம் அதிக விலைக்கு விற்று ஆளும் கட்சி கொள்ளையடிப்பதற்கும்தான் இந்த எற்பாடு.
 
எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா தந்திரமாக அறிவிக்கப் போகும் ஏமாற்று நடவடிக்கைகளை நம்பி மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. அனைத்து மதுக்கடைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.