வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வியாழன், 24 ஜூலை 2014 (16:30 IST)

மேலும் ஓர் அம்மா திட்டம் - 'அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம்'

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர் வரிசையில் மேலும் ஓர் அம்மா திட்டம் சேர்ந்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், “அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம்” என்ற புதிய திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. 
 
விதி 110இன் கீழ், 2014 ஜூலை 24 அன்று ஜெயலலிதா விடுத்த அறிவிப்பு வருமாறு:
 
பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகவும்; தொழில் முனைவோர் செயல் திறன் மேம்பாடு அடைவதற்கான நாற்றங்காலாகவும்; நிலைத்த வேலை வாய்ப்பினை வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கீழ்க்காணும் திட்டங்களை இந்த மாமன்றத்திற்கு அளிப்பதில் நான் பெருமை அடைகிறேன். 
 
தமிழ்நாட்டில் 31.3.2014 அன்றைய நிலவரப்படி 9.68 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இத்தொழில் நிறுவனங்களிலும், புதியதாக ஏற்படுத்தப்படும் தொழில் நிறுவனங்களிலும் தேவைப்படும் மனித ஆற்றலை வழங்கிடும் வகையிலும்; வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் “அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 25 வயது வரையிலான பொறியியல், தொழிற் கல்வியியல், தொழில் பட்டயப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வேலையில்லாத இளைஞர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். இதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 6 மாதங்களுக்கான வேலை குறித்த பயிற்சியினை இளைஞர்களுக்கு அளிக்கும். பயிற்சி காலத்தில் தொழில் நிறுவனங்கள் மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும். ஆறு மாத பயிற்சி முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 12,000 ரூபாயினை அரசு வழங்கும். 6 மாத பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி பெற்றவர்களின் திறமை, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால், அதாவது National Skill Development Corporation-ஆல் அறியப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் அரசு வழங்கும். 
 
ஆறு மாத பயிற்சி முடித்த இளைஞர்களை தொழில் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்திக் கொள்ளும். வேலையில் சேர்த்துக் கொண்ட பின் வழங்கப்படும் ஊதியம் 5000 ரூபாய் அல்லது தொடர்புடைய சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் இவற்றுள் எது உயர்ந்ததோ அத்தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 25,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் 30 சதவீதம் மகளிருக்கென ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்காக 32 கோடியே 50 லட்சம் ரூபாயினை அரசு வழங்கும். இத்திட்டம், படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தகுந்த ஊதியத்துடன் கூடிய பயிற்சியினைப் பெற்று வேலை வாய்ப்புகளைப் பெற வழி வகுக்கும். 
 
அரசு மானியம் 25 விழுக்காடாக அதிகரிப்பு
 
சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களை, குறிப்பாக, படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை; சுய தொழில் முனைவோர்களாக ஆக்கும் வகையில் தமிழக அரசு உருவாக்கியுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன் வருவோருக்கு, திட்ட மதிப்பீட்டில் 15 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 75,000 ரூபாய் என்ற அளவில் தற்போது அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தை 25 விழுக்காடாக அதிகரித்து, அதிகபட்சம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 25 கோடி ரூபாய் செலவு ஏற்படும். 
 
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.