வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (13:53 IST)

பெரியசாமியுடன் கருணாநிதியை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன்: இணைந்து பணியாற்றுவதாக தகவல்

திமுக தலைவர் கருணாநிதியை அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பெரியசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர், அப்போது இருவரும் இணைந்து பணியாற்றுவதாக தெரிவித்தனர்.
 
கடந்த 2002 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
 
பின்னர் அதிமுக வில் இருந்து நீக்கப்பட அனிதா ராதாகிருஷ்ணன் திமுக வில் இணைந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 
இதனால், அனிதா ராதாகிருஷ்ணன் கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். எனவே அவர் வேறு கட்சிகளில் இணையப் போவதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவருடன் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியும் வந்திருந்தார்.
 
அப்போது, திமுக தலைவர் கருணாநிதி, "பெரியசாமியும், அனிதா ராதாகிருஷ்ணனும் இணைந்து கட்சிப்பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர். இனி இருவரும் இணைந்து செயல்படுவார்கள்" என்று கூறினார்.
 
அதைத் தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணனும் பெரியசாமியும் கை குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
 
இந்த சந்திப்பிற்குப் பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன், பெரியசாமி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
 
அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், "கடந்த 6 மாத காலமாக தலைவரையும், தளபதியையும் சந்திக்காமல் இருந்தேன்.
 
அது ஒரு துன்பமான காலம். நாங்கள் இனி கட்சி வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றுவோம்." என்று கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, பெரியசாமி கூறுகையில், "தலைவரும், தளபதியும் எங்களை அழைத்தார்கள். அதன்பேரில் சந்தித்தோம்.
 
கட்சியின் வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
 
நாங்களும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. இனி கட்சி வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றுவோம்" என்று கூறினார்.