செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 6 மே 2015 (17:33 IST)

மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி எழுதிய 2 ஆவது கடிதம்

தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை திமுக இல்லாமல் எழுத முடியாது என பாமக எம்.பி. அன்புமணி திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் தர்மபுரி முன்னாள் திமுக எம்.பி. தாமரைச்செல்வன் நேற்று பதில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில்  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
 
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
 
தமிழ்நாட்டை சீரழித்ததில் அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி தங்களுக்கு நேற்று முன்நாள் நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில் நான் எழுப்பிய வினாக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியிருந்தாலோ, தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வதாக அறிவித்திருந்தாலோ அது நாகரீகமான அரசியலுக்கு வழி கோலியிருந்திருக்கும்.
 
ஆனால், 'தளபதி' என்று அழைக்கப்பட்டாலும் சட்டப்பேரவையில் எப்படி நீங்கள் பதுங்கிக்கொண்டு, மற்ற உறுப்பினர்களை பாய வைப்பீர்களோ, அதேபோல் இப்போதும் எனது கடிதத்திற்கு என்னால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் மூலம் தரக்குறைவாக பதில் அளிக்க வைத்திருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களைப் போன்றவன் அல்ல. அநாகரீக, லாவணி அரசியல் நடத்துபவனும் அல்ல. அதனால் தான் நானே மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். நான் தங்களுக்கு எழுப்பியிருந்த கேள்விகள் அனைத்தும் தமிழகத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனதில் எழும் கேள்விகள்தான். இந்தக் கேள்விகளை எழுப்பியதற்காக பல்வேறு தரப்பு மக்களும் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். அவர்களில் பலர் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
அதிமுகவுடனும், திமுகவுடனும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்ததாக திமுக குற்றஞ்சாற்றியிருக்கிறது. இது உண்மை தான். இதைக் கண்டுபிடிப்பதற்காக நீங்கள் ஒரு குழு அமைத்து ஆராய்ச்சி செய்திருக்கத் தேவையில்லை. உங்களுடனும், அதிமுகவுடனும் கூட்டணி அமைத்ததுதான் நாங்கள் செய்த மிகப்பெரியத் தவறு, இதற்காக வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒரு கட்சி தவறை ஒப்புக்கொள்வது சாதாரணமான விஷயமல்ல. அதுமட்டுமின்றி, 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 96 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த திமுகவை ஆட்சியில் அமர்த்தி உங்கள் தலைவரை முதல்வராகவும், உங்களை துணை முதலமைச்சராகவும் அமர வைத்தது நாங்கள் செய்த இன்னொரு தவறு. இந்த தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதற்காகவே தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத அரசை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து மக்கள் பணியாற்றி வருகிறோம். இதுவரை 15 முறை மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக்கொண்ட கட்சி தானே திமுக.
 
2011 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடிகர் வடிவேலுவை வைத்து, கேப்டனா? அவன் எந்தக் கப்பலுக்குக் கேப்டன்? கடல்ல தண்ணில மிதக்கிற கப்பலை ஓட்டுறவன் கேப்டன். சதா தண்ணியில மிதக்கிறவன் கேப்டனா? என்றெல்லாம் யாரைப் பற்றி பேச வைத்து, நீங்களும், கலைஞரும் ரசித்தீர்களோ, இன்று அவரை வீட்டிற்கு அழைத்து பரஸ்பரம் படத்தை மாற்றிக் கொள்ளும் நிகழ்வுகள் எல்லாம் தமிழக நலனைக் கருத்தில் கொண்டவையல்ல. கூட்டணியை மட்டும் கணக்கில் கொண்டவை என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர். விஜயகாந்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டது உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயமாகும்.
 
தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தது எப்படி? என்பது உங்கள் கட்டளைப்படி என்னிடம் கேட்கப்பட்டுள்ள இன்னொரு கேள்வி. மக்களும், கட்சியினரும் விரும்பியதால் அந்தப் பதவிக்கு வந்தேன். ஆனால் ஸ்டாலின் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மருமகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர். இந்தியாவில் வேறு எந்தக் கட்சித் தலைமையாவது தொண்டர்கள் உழைப்பை இப்படி சுரண்டி பயனடைந்ததுண்டா? 
 
நான் மாநிலங்களவை உறுப்பினராவதற்கும், மத்திய அமைச்சராவதற்கும் உதவி செய்தவர் கலைஞர் என்று திமுக கூறியிருக்கிறது. எனக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது திமுக எனக்குக் கொடுத்தது சலுகை அல்ல. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகளை வழங்குவதற்கு பதிலாக 6 தொகுதிகள் மட்டும் வழங்கப்பட்டதால் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி தான் அடுத்து வந்த மாநிலங்களவைத் தேர்தலில் எனக்கு திமுக ஆதரவு அளித்தது. ஒருமுறை எங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்ததற்காக 3 முறை எங்களின் ஆதரவை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.

நான் செய்த சாதனைகளை, 50 ஆண்டுகளில் செய்ய முடியாதவற்றை 5 ஆண்டுகளில் மருத்துவர் அன்புமணி சாதித்துள்ளார் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், அன்புமணி இராமதாசு ஒரு நடமாடும் மருத்துவ என்சைக்ளோபீடியா என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் பாராட்டினார்கள். எனது சாதனைகளை பல மேடைகளில் பில் கிளிண்டனும், பில் கேட்சும் பாராட்டியுள்ளனர்.
 
திமுக சார்பில் கருணாநிதி 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்திருக்கிறார். மத்திய அரசில் திமுக 18 ஆண்டுகள் அங்கம் வகித்திருக்கிறது. அக்கட்சி சாதித்தவை என்னவென்று சொல்ல முடியுமா? இப்போதும் மக்களுக்கு சேவை செய்கிற பெருமை மற்றும் உரிமையுடன் சொல்கிறேன். 108 அவசர ஊர்தித் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், 4 சர்வதேச விருதுகள் போன்றவை பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளங்கள். ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல், பதவிக்காகவும், ஊழலுக்காகவும் பேரம் பேசும் நீரா ராடியா ஒலிநாடா, நீதிபதி சர்க்காரியா ஆணையத்தின் விஞ்ஞான ஊழல் சான்றிதழ் ஆகியவையே திமுகவின் அடையாளங்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா?
 
தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்டிப் படைக்கும் திமுக, அதிமுக ஆகிய இரு கிரகணங்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே நாங்கள் போராடுகிறோம். அதற்காகத்தான் இரு கட்சிகளின் குறைகளையும் அம்பலப்படுத்துகிறோம். 
 
எங்களின் இந்தப் பணி தொடரும். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தமிழக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும், ஈழத் தமிழர் நலனுக்காகவும் திமுக எதையாவது செய்திருப்பதாக நீங்கள் கருதினால் அது குறித்தும் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா? என்று அன்புமணி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.