வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (16:52 IST)

தர்மபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை: அன்புமணி முதல்வருக்கு கடிதம்

தமிழகத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தருமபுரி தொகுதியில் நிர்மாணிக்க, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தரமான மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவச் சேவையை பரவலாக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிப் பட்டி, பெருந்துறை ஆகிய ஐந்து இடங்களில் ஏதேனும் ஒன்றில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை அமைக்கலாம் என மாநில அரசு பரிந்துரைத்ததன் அடிப்படையில் அந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது.
 
தருமபுரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதால் அங்கு இந்த மருத்துவக் கழகத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமாக 400 ஏக்கருக்கு அதிகமான நிலம் உள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் இங்கு உள்ளன. தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட தருமபுரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்த முடியும்.
 
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து மனித வாழ்நிலைக் குறியீடுகளிலும் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் தருமபுரி 32 ஆவது  மாவட்டமாக உள்ளது. இங்கு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைக்கப்பட்டால் இந்த மாவட்டத்தின் மீதான தோற்றம் மேம்படும். மருத்துவச் சுற்றுலாவுக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், மருத்துவக் கல்வி பயில்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு வருவார்கள். 
 
மேலும், மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கும். இதனால் தருமபுரி மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படும். பல வகையான தொழில்கள் தொடங்கப்படுவதுடன், அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். இது தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெருமளவில் உதவியாக இருக்கும்.
 
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் மருத்துவமனை அமைப்பதற்காக ஆய்வு செய்யப்படும் இடங்களின் பட்டியலில் ஆறாவதாக தருமபுரியையும் சேர்க்க வேண்டும். மத்திய அரசுக் குழுவினர் தமிழகத்தில் தங்கி இருப்பதால் மத்திய அரசுடன் பேசி தருமபுரியில் ஆய்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதனடிப்படையில் தருமபுரியில் அகில இந்திய மருத் துவ அறிவியல் கழகம் மற்றும் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.