வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (14:29 IST)

அம்மா கதையும்.. அப்பா கதையும்... வதைபடும் மக்கள் கதையும்...

தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட 14 பேரின் இல்லத் திருமணங்களை சென்னையில் நடத்தி வைத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும் போது,‘தந்தை -மகன்’ கதை ஒன்றை கூறியுள்ளார்.


 

இதற்கு முன்பு அதிமுக சார்பில் நடத்தி வைக்கப்பட்ட இலவச திருமணங்களின் போது மணமக்கள் அனைவரது நெற்றியிலும் அம்மா படம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
 
இந்தத் திருமணத்தில் அப்படி இல்லை. இலவசமாக எது கொடுத்தாலும், அது வெள்ள நிவாரணப் பொருட்களாக இருந்தாலும், விலையில்லா ஆடு, மாடாக இருந்தாலும், இலவச திருமணமாக இருந்தாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் என்பது தான் ஆளுங்கட்சி விதி போலும். சரி. கதைக்கு வருவோம். அம்மா சொன்ன கதையின் சுருக்கம் இதுதான்.
 
ஒரு சின்னப்பையன் அப்பாவிடம் அரசியல் பாடத்தைக் கற்றுத் தருமாறு கூறினாராம். அதற்குத் தந்தை அரசியல் பாடத்தை நீ தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினாலும், மகன் பிடிவாதமாக இருக்கவே, ஏணி ஒன்றில் பையனை ஏற்றி விட்டு, மேலே சென்ற வுடன் கையை எடுத்துவிட, மகன் கீழே விழுந்தாராம். இது குறித்து மகன் கேட்டதற்கு எல்லாவற்றையும் நீ அறிந்து கொண்டால், என்னை யார் மதிப்பார்கள் என்று தந்தை கேட்டாராம்.
 
இந்த கதையை கூறிய முதல்வர், அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்காகத்தான் இந்தக் கதையை கூறினேனே தவிர, நீங்கள் யாரையாவது கற்பனை செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று பொடி வைத்து முடித்தார். இந்த கதைக்கு பதில் கதை விடும் வகையில், திமுக தலைவர் கலைஞர் முரசொலி ஏட்டில் ‘பேராசை பெருமாட்டியைப் பற்றி குட்டிக் கதை’ என்ற தலைப்பில் கதை ஒன்றை கூறியுள்ளார்.
 
இந்தக் கதையிலும் அப்பா - மகன்தான் பிரதான பாத்திரங்கள். ஊரிலே உள்ள பிள்ளைகளுக்கெல்லாம் அரசியல் பாடத்தைக் கற்றுக் கொடுத்த தந்தை தன் மகனுக்கு மட்டும் அரசியலை முறையாக கற்றுக் கொடுக்காமலா இருந்து விடுவார் என்று கேள்வி கேட்டு, தந்தையும் மகனும் அன்போடும் பாசத்தோடும் இருந்து அரசியலை முறையாக நடத்துவதைக் கவனித்து வந்த எதிர் வீட்டு பெருமாட்டிக்கு பொறாமை என்றால் அவ்வளவு பொறாமை, மகன் மிகுந்த எச்சரிக்கையோடும், படிப்படியாகவும் கவனமாகவும் ஏணியில் ஏறிவருவதையும் மகன் பத்திரமாக ஏணிப்படிகளில் ஏறி மேலே வரவேண்டும் என்று எண்ணுகின்ற தந்தையையும் பார்த்து மிகப்பெரிய ஏமாற்றத்தை பெருமாட்டி அடைவார் என்பதுதான் உண்மைக்கதை என்று முடித்துள்ளார்.
 
இந்தக் கதையின் படி ஏணியில் ஏறுகிற உரிமை ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது உறுதியாகிறது. உடன்பிறப்புகளின் வேலை ஏணியில் ஏறும்போது தரையில் நின்று கொண்டே கைதட்டி மகிழ்வதுதான். இந்த இரண்டு கதைகளையும் கேட்ட பிறகு மக்களின் மனதில் ஒரு கதை ஓடுகிறது.
 
பெரியவர் ஒருவர் கடை ஒன்றைத் துவக்கினார். பகுத்தறிவு, சுயமரியாதையோடு துவக்கப்பட்ட கடை அது. ஒரு நிலையில், அதிலிருந்து பிரிந்து அண்ணன் வர்த்தக நோக்கத்துடன் கடையை ஆரம்பித்தார். இருந்தாலும் பெரியவர்தான் இந்தக் கடைக்கும் உரிமையாளர் என்று பெருந்தன்மையாக கூறினார். அவரது மறைவுக்குப் பிறகு பாசகக்கார அப்பா, கடைக்கு பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்தார். அதன்பின்பு அது ஒரு குடும்பக் கடையாகவே மாறிவிட்டது. ஒரு நிலையில் அந்தக் கடைக்கு போட்டிக் கடையை ஒருவர் அங்கிருந்து பிரிந்து ஆரம்பித்தார்.
 
அதன் பின்பு, அம்மா என்று கமிஷன் ஏஜெண்டுகளால் அழைக்கப்படுபவர் கைக்கு கடை கை மாறியது. அதிலிருந்து அம்மா கடை, அப்பா கடை ஆகிய இரு கடைகள் மட்டுமே ஊரில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம். இருவரும் சரக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்வது தில்லியில் உள்ள இரண்டு கடைகளில்தான். அந்த சரக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும், கூவிக் கூவி விற்று அதை மக்கள் தலையில் கட்டுவதில் இருவரும் சமத்தர்கள்.
 
இந்திய குளிர்பான சந்தையை பெப்சி, கோக் எனும் இரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களே கையில் வைத்துக் கொண்டு மக்களை மொட்டையடிப்பது போல, தமிழக சந்தையை தாங்கள் இருவர் மட்டுமே தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம். இரண்டு கடைகளும் போட்டிக் கடைகள் போல காட்டிக் கொண்டாலும், ஒரே மாதிரி கலப்பட சரக்குதான் இரண்டு கடைகளிலும் விற்பனையாகின.
 
இந்தக் கடைகளின் பொருட்களை வாங்கிச் சாப்பிட்ட மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளானார்கள். போணியாகாத சரக்குகளை தள்ளிவிட ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போன்ற கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதிலும் இருவரும் சமர்த்தர்கள்.
 
- மதுரை சொக்கன்

நன்றி : தீக்கதிர்