வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 22 டிசம்பர் 2014 (13:53 IST)

அமித்ஷாவை சந்திக்காமல் புறக்கணித்த விஜயகாந்த்

சென்னைக்கு வருகை தந்துள்ள பாஜக தலைவர் அமித்ஷாவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்காமல் புறக்கணித்துள்ளார்.
 
சென்னையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பாஜக தலைவர் அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.
 
அவரை பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.
 
ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்காமல் புறக்கணித்தார். இந்நிலையில், உடல் நலம் சரி இல்லாத காரணத்தால்தான் விஜயகாந்த் சந்திக்கவில்லை என்றும் வேறு காரணம் ஏதும் இல்லை என்றும் தேமுதிக நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
 
ஆனால், கிறிஸ்துமஸ் விழாவில் விஜயகாந்த் பிரியாணி வழங்கப் போவதாக தேமுதிக தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் பாஜகவினர் அதிருப்தி அடைந்தனர்.
 
இந்நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமித்ஷா ‘2016 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தப்பின்னர் பாஜக தேர்தலை சந்திக்கும்‘ என்று அதிரடியாக அறிவித்தனர்.
 
தேமுதிக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் பதவியும் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தி வரும் நிலையில், அமித்ஷாவின் அறிவிப்பால் விஜயகாந்த் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 
தேமுதிக நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு திமுக ஆதரவாளரான பேராயர் எஸ்றா சற்குணம் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார்.
 
எஸ்றா சற்குணம், கடந்த நாளுமன்ற தேர்தலில் தேமுதிக பாஜக கூட்டணியில் இணையக் கூடாது என்றும் திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவித்து அதற்கான முயற்சிகள் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.