வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2016 (06:24 IST)

துள்ளிவரும் ஜல்லிக்கட்டு அரசியல்-அமித் ஷா தமிழகம் வருகை: பரபரப்பு அரசியல் பின்னணி

தமிழகத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகை அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது.
 

 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றே தீர வேண்டும் என்பது பாஜக தேசிய தலைவர் அமித் ஷா-வின் விருப்பம். அது மட்டும் அல்ல, அவரது பெரும் முயற்சியே இந்த வெற்றிக்கு காரணம்.
 
எனவே, தமிழகத்தில் தடைகளை தாண்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால், அதைக் காண பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகை தர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக சட்ட மன்றத் தேர்தலை மனதில் வைத்தும், ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிலைப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், தமிழகத்திற்கு அமித் ஷா வருகை குறித்து, அரசியல் ரீதியாக சில கண்ணோட்டம் நிலவுகிறது. இது குறித்து, தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் சிலரிடம் பேசிய போது,  தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் வர உள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பாஜகவின் கனவு.
 
மேலும், பாஜக டெல்லி மேலிடம் தமிழகத்தில் தென்மாவட்டங்களை குறிவைத்து ஏற்கனவே சில அரசியல் காய் நகர்த்தல்களை மிக ரகசியமாகவும், மிகச் சிறப்பாகவும் செய்துள்ளது.
 
இந்த நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண பாஜக தலைவர் அமித் ஷா நேரில் வந்து கலந்து கொண்டால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திக் காட்டிய பெருமை பாஜகவுக்கு முழுமையாக கிடைக்கும்.
 
இதன் மூலம் பாஜகவுக்கு தமிழகத்தில் மேலும் செல்வாக்கு அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இதனால் அமித் ஷா தமிழகம் வருகை தருவது கட்டாயம்  ஆகியுள்ளது. இந்த தருணத்தையே பாஜக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளது என்கிறார்கள்.
 
ஆக, துள்ளிவரும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்வைத்து தமிழகத்தில் வலுவான சக்தியான திமுக மற்றும் அதிமுகவையே பின்னுக்கு தள்ளிவிட்டு பாஜக ஒருபடி முன்னேறியுள்ளது. பலே பாஜக.