வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (00:30 IST)

தேர்தல் முன்பே கூட்டணி அமைத்த தமிழக அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்பே, தமிழக அரசியல் கட்சிகள், தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது.
 

 
மக்கள் பிரச்சினைகளில் இணைந்து செயல்படும் வகையில் அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டு இயக்கம் நடத்த போவதாக சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்கனவே அறிவித்தார்.
 
இதனையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தாயகத்தில் சந்தித்து பேசினார். மேலும், பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்தித்தார்.
 
இந்த நிலையில், இதன் அடுத்த கட்டமாக, இந்த கூட்டு இயக்கத்திற்கான முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹருல்லா,  காந்திய மக்கள் இயக்கத்தின் பொருளாளர் குமரய்யா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
அப்போது, ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகள் இணைந்து, வரும் காலங்களில் நாங்கள் கூட்டு இயக்கமாக மக்கள் பிரச்சினைகளுக்காக போராட உள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்வோம் என்றார்.
 
தமிழக சட்ட மன்றத் தேர்தல் முன்பே, இந்தக் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.