1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (19:19 IST)

69 சதவீத இடஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: வைகோ

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "1921 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் பின்பற்றப்படுகின்ற இடஒதுக்கீடு முறை, சமூக நீதிக் கொள்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது.
 
1990ல் வி.பி.சிங் அரசு மண்டல் குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்தி, பின்தங்கிய வகுப்பினருக்கு மத்திய அரசுப் பணிகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்கு வழிவகை செய்தது. இதற்கு முன்பே, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான, 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறை நடைமுறையில் இருந்து வருகின்றது.
 
மண்டல் குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது என்று தீர்ப்பளித்தது.
 
அதன் பின்னர், 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறையைப் பாதுகாத்திட 1993 ஆம் ஆண்டு, ஜெயலலிதா அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் சட்டத்தின் 31சி பிரிவின் கீழ் சட்டம் கொண்டு வந்தது. பின்னர் மத்திய அரசு இதனை அரசியல் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் சேர்த்தது.
 
ஆனால், தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஒரு வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் மீண்டும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்துக் கேள்வி எழுப்பி இருக்கின்றது.
 
ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வரும்போதும், தமிழக அரசின் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வித் துறையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
 
உச்ச நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், அரசியல் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள கூறுகள் மறு ஆய்வு செய்யப்பட்டு, தேவைப்பட்டால் அவற்றை ரத்து செய்யும் அதிகாரமும் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளதாகத் தெரிவித்தது.
 
இதன்படி, தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு கொள்கைக்குத் தொடர்ந்து ஆபத்து இருந்து வருகின்றது. எனவே, மத்திய அரசு உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, சமூக நீதியை நிலை நாட்டிடும் வகையில், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும்; இடஒதுக்கீடு முறைக்கு எதிராக எழுந்துள்ள சிக்கல்களை முழுமையாகக் களைந்திட, இடஒதுக்கீடு அளவைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கே அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்'' எனக் கூறியுள்ளார்.