1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (15:15 IST)

திமுக, காங்கிரஸ் கூட்டணி உருப்படாது என அழகிரி விரக்தியில் கூறுகிறார் - இளங்கோவன்

திமுக, காங்கிரஸ் கூட்டணி உருப்படாது என்று மு.க.அழகிரி விரக்தியில் கூறியிருக்கிறார். அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 

 

இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, ”காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நான் எதிர்பார்க்காத வகையில் அதிகமானவர்கள் மனு கொடுத்து வருகிறார்கள்.

உண்மையான காங்கிரஸ்காரர்கள் உணர்வுபூர்வமாக உற்சாகமாக மனு கொடுத்து வருகிறார்கள். விருப்பமனு கொடுக்காதவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்பப்பட்டாலும் அவர்கள் விருப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
 
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதற்காக விஜயகாந்தை தேவைப்பட்டால் நேரில் சந்தித்து அழைப்பேன். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். கண்டிப்பாக தேர்தலுக்கு பிறகு அதனை எல்லோரும் அறிவார்கள்.
 
தொகுதி பங்கீடு என்பது எல்லாம் பெரிய பிரச்சினை அல்ல. ஒரு காலத்தில் காங்கிரசும், திமுகவும் தலா 110 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன்பிறகு காஙகிரஸ் 45 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்டோம். தொகுதி எண்ணிக்கை என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். நிச்சயமாக சுமூகமான முறையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் முடியும்.
 
அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு ஒரே குறிக்கோள். திமுக, காங்கிரஸ் கூட்டணி உருப்படாது என்று மு.க.அழகிரி விரக்தியில் கூறியிருக்கிறார். அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.