வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 4 மார்ச் 2015 (10:22 IST)

அதிமுக அரசு தொழிற்சங்கத்தினரை மிரட்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது: கருணாநிதி

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில் அதிமுக அரசு  தொழிற்சங்கத்தினரை மிரட்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள, கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கேள்வி:- சுரேஷ் பிரபுவின் மத்திய ரயில்வே பட்ஜெட்டையும், அருண் ஜேட்லியின் பொது பட்ஜெட்டையும் எல்லோரையும் முந்திக் கொண்டு ஜெயலலிதா வரவேற்று அறிக்கை கொடுத்தது எதைக் காட்டுகிறது? 
 
பதில்:- ஜெயலலிதா எல்லோரையும் முந்திக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகளை வரவேற்று அறிக்கை கொடுத்திருப்பதும், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு எல்லோரையும் முந்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருப்பதும், மத்திய அரசின் மதவாத ஆதரவு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மயமாக்கல் போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் அதிமுக தெரிவிக்காமல் இருப்பதும், ஏன், ஜெயலலிதாவின் வீட்டிற்கே வந்து மத்திய அரசின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பார்த்துப் பேசுவதும், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பதைப் போல எதையோ 'சூசகமாக' தெரிவிக்கின்றது. 
 
கேள்வி:- பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி சில சந்தேகங்களைக் கேட்ட போது, அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதற்குப் பதில் சொல்லாமல் மழுப்பிய நிலையில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி அரசு வழக்கறிஞரிடம் சென்று கோபித்துக் கொண்டதாகச் செய்தி வந்திருக்கிறதே, இது எதைக் காட்டுகிறது? 
 
பதில்:- அவர்கள் நடந்து கொண்டது, 'நான் அடிப்பதைப் போல அடிக்கிறேன், நீ அழுவதைப் போல அழு' என்பதைப் போலத் தான் இருக்கிறது.
 
ஜெயலலிதா ஏற்கனவே கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவதற்காக மனு தாக்கல் செய்தபோது, இந்தப் பவானி சிங்தான் முதலில் அவரை ஜாமீனில் விடக் கூடாது என்றும், பிறகு ஜாமீனில் விடலாம் என்றும் இரண்டு வெவ்வேறான கருத்துகளை நீதிமன்றத்தில் தெரிவித்தவர். தற்போது அவர் எவ்வாறு வாதாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
கேள்வி:- ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் சென்ற தொழிற்சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய செய்தியும், புகைப்படங்களும் அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளதே? 
 
பதில்:- ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிமுக தொழிற்சங்கத்தினரும், அவர்கள் அழைத்து வந்த குண்டர்களும் சேர்ந்து மற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் மீது கல் வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொமுச பொதுச் செயலாளர் சண்முகத்தின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்.
 
இதைத் தடுக்க முற்பட்ட காவல்துறையினரையும் கல் வீசித் தாக்கியிருக்கிறார்கள். இதில் 7 தொமுச தொழிலாளர்கள் உட்பட 10 போக்குவரத்து தொழிலாளர்களின் மண்டை உடைந்துள்ளது. 
 
தொமுச உள்ளிட்ட மற்ற தொழிற்சங்க தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, கல் வீச்சில் ஈடுபட்ட அதிமுக தொழிற்சங்கத் தொழிலாளர்களைத் தாக்கச் சென்றபோது, காவல் துறையினர் தடுத்துள்ளார்கள்.
 
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அதிமுக வின் மேலிடம் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிற்சங்கத்தினரை மிரட்ட நினைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.