செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 30 ஆகஸ்ட் 2014 (08:09 IST)

7 ஆவது முறையாக அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வானார் ஜெயலலிதா

7 ஆவது முறையாக அதிமுகவின் பொதுச் செயலாளரானார் முதலமைச்சர் ஜெயலலிதா, அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டர்.

இதற்கான சான்றிதழை, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வெள்ளிக் கிழமை வழங்கியனார் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன். இந்த நிகழ்வை, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடினர்.

அதிமுகவின் சட்டவிதிகள்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2014 ஆம் ஆண்டில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வேட்புமனுக்கள் 20 முதல் 24 ஆம் தேதி வரை பெறப்பட்டன.

பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஜெயலலிதாவைத் தவிர யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மேலும், பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பு வகிக்க விருப்பம் தெரிவித்து 2 ஆயிரத்து 467 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, கட்சியின் அமைப்புச் செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இந்நிலையில், தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெறுவதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தார் முதல்வர் ஜெயலலிதா.

அவருக்கு வழிநெடுகிலும் கட்சியினர் அமோக வரவேற்பு அளித்தனர். நண்பகல் 12.10 மணியளவில் கட்சி அலுவலகத்துக்கு வந்த ஜெயலலிதா, தேர்தல் ஆணையாளரான விசாலாட்சி நெடுஞ்செழியனிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.