வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (12:41 IST)

வேளாண்துறை முறைகேடுகள்: விசாரணை கமிஷன் அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

வேளாண் துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
மக்கள் உயிர் வாழத் தேவையான உணவு தானியங்களை விளைவிக்கும் வேளாண்மையை நிர்வாகம் செய்யும் வேளாண்துறை ஊழல்களை விளைவிக்கும் துறையாக மாறிவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு அத்துறையில் ஊழல்கள் அதிகரித்து விட்டன.
 
விதையில் தொடங்கி உரம் வரை அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்வதில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. விவசாயம் செழிக்க வேண்டும், விளைச்சல் பெருக வேண்டும் என்றால் அதற்கான முதன்மைத் தேவை தரமான விதைகள் ஆகும். ஆனால், விதைகளை கொள்முதல் செய்வதில்தான் பெருமளவில் ஊழல் நடைபெறுகிறது.
 
உதாரணமாக தமிழகத்திற்கு ஆண்டுக்கு 3 லட்சம் டன் தானிய விதைகள் தேவைப்படுகின்றன. நெல், பயறு வகைகள் ஆகியவற்றின் விதைகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முடியும். ஆனால், திட்டமிட்டே தமிழகத்தில் விதை உற்பத்தியை ஆட்சியாளர்கள் ஊக்குவிக்கவில்லை. 
 
இதனால் தமிழகத்தில் 91,000 டன் மட்டுமே விதைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மீதமுள்ள 2,09,000 டன் விதைகள் கர்நாடகம் மற்றும் ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த வகையில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
 
தமிழக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 65 ஆயிரம் டன் ஜிப்சம் தேவைப்படுகிறது. இந்த உரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலையில் கொள்முதல் செய்ய இயலும். ஆனால், இந்த நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யாமல், இந்த உரங்களை வாங்கி விற்கும் ஐ.சி.எம்.சி என்ற நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியதால் அரசுக்கு பெருமளவில் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது.
 
அதேபோல், தமிழகத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட வேளாண்மை ஆய்வுக் கூடங்களுக்குத் தேவையான வேதிப் பொருட்களை முன்னணி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யாமல், ஐ.சி.எம்.சி நிறுவனத்திடமிருந்து தரமற்ற வேதிப்பொருட்கள் வாங்கப்பட்டதிலும் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
வேளாண் துறைக்கான உரங்களை முன்னணி உர நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்களில் இருந்துதான் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தும், தரமில்லாத நீரில் கரையும் தன்மை கொண்ட உரங்கள் ரூ.45 கோடி மதிப்பில் வாங்கப்பட்டதால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமும் ஊழல்தான்.
 
மாநிலத்திலுள்ள 15 நுண்ணுயிர் உரத்தயாரிப்பு மையங்களில் தயாரிக்கப்படும் அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவையும், நோய்த் தடுப்பு நுண்ணுயிரிகளான சூடோ மோனாஸ் போன்ற வையும் தரம் குறைந்தவையாக உள்ளன. இவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரம் குறைந்தவையாக இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். இம் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 
கடந்த 2010 ஆம் ஆண்டில் பவானி, அவிநாசி, பாலக்கோடு, தென்காசி, போளூர், காட்டான் கொளத்தூர், உத்தம பாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் தொடங்கப்பட்ட நுண்ணுயிர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கருவிகள் வாங்கியதில் ரூ. 6 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்திய குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்து பல ஆண்டுகள் ஆகியும் அதன் மீது இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
வேளாண்மைப் பொறியியல் துறையில் தலைமைப் பொறியாளர் பதவி 4 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. அப்பதவிக்கு தகுதியற்ற செந்தில் என்பவர் பொறுப்பு தலைமைப் பொறியாளராக நீடித்து வருகிறார்.
 
இவரை விட அதிக அனுபவமும், திறமையும் கொண்ட மூத்த அதிகாரிகள் 9 பேர் இருக்கும் நிலையில், அவர்களுக்கு மேலாக செந்திலை நியமித்திருப்பதன் காரணமே ஆட்சியாளர்களின் தவறுகளுக்கும் உதவியாக இருக்கிறார் என்பதுதான் என்று கூறப்படுகிறது. முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் இவரும் இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
 
வேளாண்துறை ஊழல்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஊழல்வாதிகளின் மிரட்டலைத் தாங்க முடியாமல் முத்துக்குமாரசாமி போன்ற நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்வது அதிகரித்து விடும்.
 
அதுமட்டுமின்றி, ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே வேளாண் துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தவும், ஊழலுக்கு காரணமானவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.