வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 6 மே 2015 (07:17 IST)

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான நடவடிக்கை கண்துடைப்பு நாடகம்: கருணாநிதி குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திட்டமிட்ட கண்துடைப்பு நாடகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
கடந்த காலத்தில் அரசு அலுவலர்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் இடையறாத இன்னல்களுக்கு ஆளானார்கள் என்றால், தற்போது தொடர்ந்து அரசு அலுவலர்கள் இந்த அதிமுக ஆட்சியில் தற்கொலை செய்து கொண்டும், தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தும் வருவதென்பது தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது.
 
அதிமுக ஆட்சியினரே எவ்வளவோ முயற்சித்தும் மறைக்க முடியாமல் மாட்டிக்கொண்டு, ஒரு அமைச்சரை பலிக்கடாவாக்கி கைது செய்திருக்கிறார்களே, அந்த நிகழ்ச்சியில் முத்துக்குமாரசாமி என்ற அதிகாரி தன் குடும்பத்தினரைத் தவிக்க தவிக்க அனாதைகளாக விட்டு விட்டு ரயிலுக்கு முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாரே; எத்தகைய கொடுமை? அவர் எந்த அளவுக்கு ஆட்சியினரால் மன ரீதியாக அவதிக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் தற்கொலை செய்துகொள்கின்ற முடிவினை எடுத்திருப்பார்?.
 
அந்த வழக்கு விசாரணையைத் திசை திருப்பிட இந்த ஆட்சியினர் எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுகிறார்கள்?. அவரிடம் விசாரணை, இவரிடம் விசாரணை என்றெல்லாம் ஏடுகளில் செய்திகள் வந்ததே தவிர, அவர்கள் கூறியது என்ன என்பதை விசாரணை நடத்துவோர் வெளியிடாமல் ஒளித்து வைப்பதன் மர்மம் என்ன? யாரைக் காப்பாற்றுவதற்காக காவல் துறையினர் அப்படியெல்லாம் அரும்பாடுபடுகிறார்கள்?. அதற்காக ஓர் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்தார்களே.
 
அந்த அமைச்சர் அவருக்காகத்தான் நிதி வசூலில் ஈடுபட்டாரா?. "அம்மா" வுக்கு எல்லாம் தெரியும் என்று கைதான அந்த அமைச்சர் பேட்டி கொடுத்திருந்தாரே, அதன் முழு விவரம் என்ன?.
 
குற்ற வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டால், உடனடியாக அவரது வீடு, அலுவலகம் போன்றவை சோதனையிடப்படும். ஆனால் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்ட பிறகு அப்படிப்பட்ட சோதனை ஏன் நடத்தப்படவில்லை? மேலும் இதைப்போன்ற வழக்குகளில் யாராவது கைது செய்யப்பட்டால், அவர்களை உடனடியாக காவல்துறையினர் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும். அதுவும் இவரது விஷயத்தில் கேட்கப்படவில்லை.
 
மூன்றாவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீதிபதியிடம் ஆஜர்படுத்தியபோது, முதல் கட்ட விசாரணையின்போது, அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் நகல் ஒன்றைத் தாக்கல் செய்வார்கள். அதுவும் இந்தப் பிரச்சினையிலே நடந்ததாகத் தெரியவில்லை.
 
நான்காவதாக, இவரிடம் செய்தியாளர்கள் இதைப்பற்றிக் கேட்டபோது, "எல்லாம் அம்மாவுக்குத் தெரியும்" என்றார். அதுபற்றி சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்துவோர் காதிலே போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.
 
இதையெல்லாம் கூட்டிப் பார்த்தால், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எதிர்க்கட்சிகளை ஏமாற்றுவதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட கண்துடைப்பு நாடகமாகத்தான் தெரிகிறது.
 
அரசு அலுவலர்களின் தற்கொலை ஒரேயொரு முத்துக்குமாரசாமியுடன் முடிந்து விட்டதா? சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சத்துணவுப் பிரிவு அலுவலகத்தில் சண்முகவேல் என்ற அரசு அலுவலர், மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரே, அதுபற்றிய உண்மைகள் என்ன?
 
திருச்சியில் அரசு பொது மருத்துவமனையில் ஆர்.எம்.ஓ., நேரு என்பவர் மேலிடத்திலே இருப்பவர்களின் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதும் இந்த அதிமுக ஆட்சியில்தான். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தாசில்தாராகப் பணியாற்றிய தியாகராஜன்– நெல்லை மாநகராட்சியில் பணியாற்றிய பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு மாண்டதும் இந்த அதிமுக ஆட்சியிலேதான்.
 
சென்னை தங்கசாலை பகுதியில் ரேஷன் கடை அலுவலர் இளங்கோ என்பவர் தற்கொலை செய்து கொண்டு மாண்டாரே; அதிகாரிகள் மிரட்டல் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வந்ததே. அது பற்றிய விவரம் என்ன?.
 
இதோ; என்னுடைய தொகுதியான திருவாரூர் அருகே, அதிகாரியின் "டார்ச்சர்" தாங்க முடியாமல் தீக்குளித்த அரசு அலுவலர் ஒருவர், மருத்துவமனையிலே உயிரிழந்திருக்கிறாரே; அவருடைய குடும்பத்திற்கு இந்த ஆட்சியினர் தரப்போகின்ற பதில் என்ன?. திருவாரூர் அருகேயுள்ள அம்மையம்மன் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முத்துக்கிருஷ்ணன், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  "ஓவர்சியராக" பணியாற்றி வந்திருக்கிறார். 3 ஆம் தேதி மாலையில் தீக்குளித்து, மருத்துவமனையிலே சேர்க்கப்பட்ட முத்துக்கிருஷ்ணன், 4 ஆம் தேதி அதிகாலையில் இறந்தார்.
 
தீக்குளித்த போதே இறந்து விடாமல் முத்துக்கிருஷ்ணன், தான் இறப்பதற்கு முன்பு காவல்துறையினரிடமும், திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதாவிடமும் மரண வாக்குமூலமே அளித்திருக்கிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் துறையினரால் செயற்பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதுபோலவே, கோவையில் சக்திவேல் என்பவரும், அவருடைய சகோதரி வசந்தா என்பவரும் ரேஷன் கடைகளில் பணியாற்றி வருகிறார்கள். வசந்தாவுக்கும், கோவை மாநகராட்சி 62 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலருக்கும் இடையே கடன் தொடர்பான பிரச்சினை எழுந்து, வசந்தா அதுபற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
 
அந்தப் புகாரைத் திரும்பப் பெறக்கோரி, அதிமுக கவுன்சிலர் மிரட்டியதன் காரணமாக வசந்தாவின் சகோதரரான சக்திவேல் 16 தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தன் சாவுக்கு மூல காரணம் அதிமுக கவுன்சிலர்தான் என்று தன் கைப்பட கடிதமே எழுதி வைத்திருக்கிறார்.
 
இதற்கெல்லாம் முன்பாக ஈரோட்டில் வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பழனிச்சாமி என்பவர் இந்த ஆட்சியினரின் தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்.
 
ஏன், இதற்கெல்லாம் முன்பு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை, அவர்கள் திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, "டிஸ்மிஸ்" செய்த காரணத்தால், சுமார் 15 பேர் தற்கொலை செய்து மாண்டதும் இந்த அதிமுக ஆட்சியிலே தான். எனவே அதிமுக ஆட்சியில், அரசு அலுவலர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெறும் சோக நிகழ்வாகத்தான் இருந்து வருகிறது.
 
பேரறிஞர் அண்ணா 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, "கட்சிக்காரர்கள் அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியிலே இருக்கக்கூடாது" என்று குறிப்பிட்டதை, இன்றைய ஆட்சியாளர்கள் படித்திருந்தால், பல அரசு அதிகாரிகளை தற்கொலை செய்யத் தூண்டுமளவுக்குக் கடுமையாக நடந்து கொண்டிருக்கமாட்டார்கள்.

தாங்கள் செய்கின்ற ஊழல்களுக்கு, பலவீனமான சில அதிகாரிகளையும் பங்குதாரர்களாக ஆக்கிக்கொண்டு, கூட்டுக் கொள்ளை நடத்திட முடிவு செய்துவிட்டால், ஆட்சி என்ற ஒன்று தேடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதொரு பொருளாகி விடும்.
 
இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுகின்ற, ஏன் சிறிதாவது எண்ணிப்பார்க்கின்ற அளவுக்கு இப்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.