வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (11:15 IST)

அனிதா மரணம் எதிரொலி: பதற்றத்தில் தமிழகம்; வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்!

அனிதா மரணம் எதிரொலி: பதற்றத்தில் தமிழகம்; வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார் அரியலூர் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா. ஆனால் அவரது மருத்துவர் கனவு நிறைவேறாததால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


 
 
இவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதா தற்கொலை செய்துகொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டாலும், அவரை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு கொண்டு வந்தது மத்திய மாநில அரசுகள் தான் என பல தரப்பட்ட மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் அனிதாவின் மரணத்தை தொடர்ந்து அவரது மரணத்துக்கு இழப்பீடு கேட்டும் அவரது மரணத்துக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


 
 
போராட்டங்கள்:-
 
* அனிதாவின் தற்கொலையால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அவரது கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் செந்துறை திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 
* சென்னை, அண்ணா சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
* நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
 
* திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உடனடியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
* கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் மன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
* பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
* ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
* புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது.
 
* இயக்குநர் கவுதமன், தமிழகம் முழுவதும் மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
* மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்து அரியலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று கடையடைப்பு நடைபெறவுள்ளது.
 
இந்த போராட்டங்கள் முன்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெடித்தது போல தற்போது நீட் தேர்வுக்கு எதிராக வெடித்துள்ளது.